மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு..!

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு..!

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் சகல சேவைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் “மரண ஊர்வலம்” நடந்த இன்றைய நாளில் கூட, அரசாங்கம் மின்சார சபை ஊழியர்களுக்கு எந்தவொரு சாதகமான பதிலையோ அல்லது கூட்டு ஒப்பந்தத்தையோ வழங்கவில்லை என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த ஊடகங்களுக்கத் தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து கலந்துரையாடல் ஒன்று வழங்கப்படும் வரை பணிக்கு சமூகமளிக்கப் போவதில்லை எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஏனைய செயல்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரபாத் பிரியந்த, மின்தடை சரிசெய்தல் மற்றும் பராமரிப்புப் பணிகள் அனைத்தையும் நிறுத்தவுள்ளதாகவும், இந்த 24 மணிநேர காலப்பகுதியில் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகள் மற்றும் இராணுவத் தலைமையகம் ஆகியவற்றுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சுமார் 25 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ள நிலையில், இந்த தொழிற்சங்க நடவடிக்கை அரசாங்கத்தைப் பணிய வைப்பதற்கான ஒன்று அல்ல எனவும், மறுசீரமைப்புக்கு உடன்பட்டாலும் மின்சார சபை ஊழியர்களுக்கு அநீதி இழைக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஒருபோதும் உடன்படப் போவதில்லை எனவும் இலங்கை மின்சார சபையின் தேசிய ஊழியர் சங்கத்தின் செயலாளர் அஜித் தேவப்பிரிய தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin