சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும், புதிய நியமனங்களை பெற்ற இராஜதந்திரிகளிடம் இருந்து அவ்வாறானவற்றை எதிர்பார்க்கவில்லை எனவும் ஜனாதிபதி
சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது. இங்கு உரையாற்றுகையிலே ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்படுமாறும் அந்த நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சேவைகளை வழங்குவதற்கு முன்னின்று பாரபட்சமின்றி நியாயமாக செயற்படுமாறும் ஜனாதிபதி புதிய இராஜதந்திரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இலங்கைப் பணியாளர்கள் தொழில்புரியும் மத்திய கிழக்கு, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இராஜதந்திர சேவைகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் பணியை இராஜதந்திர
சேவையின் ஊடாக மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டு வருவது தூதுவருக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பு எனவும், அதற்கு தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 04 தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நியமித்தார்.
இராஜதந்திர சேவையில் 20 வருடங்களுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இவ்வாறு
இராஜதந்திர சேவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி,
கத்தார் நாட்டின் தூதுவராக – ஆர்.எஸ்.கான் அசாத்
ரஷ்ய தூதுவராக – திருமதி எஸ்.கே. குணசேகர
குவைத் தூதுவராக – எல்.பி.ரத்நாயக்க
எகிப்திய தூதுவராக – ஏ.எஸ்.கே.செனவிரத்ன
நியூசிலாந்து உயர்ஸ்தானிகராக – டபிள்யு.ஜீ.எஸ். பிரசன்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே ஆகியோரும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர்