தேன் என்று சீனிப்பாணி விற்ற மூவர் மாட்டினர்!!

சீனிப்பாணியை தயாரித்து தேன் என்று மோசடி செய்து விற்பனை செய்துவந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பொதுச் சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்குளம் பொதுச் சுகாதார பரிசோதகர் சிவரஞ்சன் தலைமையில், ஓமந்தை பொதுச் சுகாதார பரிசோதகர் விதுசன், கந்தபுரம் பொதுச் சுகாதார பரிசோதகர் ஞானபிரகாஸ், பூவரசங்குளம் பொதுச் சுகாதார பரிசோதகர் கிசோகாந் ஆகியோர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து ஊர்மிலாக்கோட்டம் பகுதியிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 200 போத்தல் சீனிப்பாணி சுகாதாரப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, சீனிப்பாணியை தயாரித்து அதற்குள் சிறிதளவு தேனை மாத்திரம் கலந்து ஏ- 9 வீதியின் முறிகண்டிப்பகுதியிலும், நெடுங்கேணி பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், இங்கிருந்து அநுராதபுரம், மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவை கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.

இது உடல் நலத்துக்கு தீங்குவிளைவிக்கின்றது. எனவே, பொதுமக்கள் தேனை கொள்வனவு செய்யும் போது சரியான முறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin