சீரற்ற காலநிலை தொடர்பில் ஆராய. விஷேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.

மன்னார் மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும்  ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (28.11) வியாழன் மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்ற

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான,ரிசாட் பதியூதீன் , காதர் மஸ்தான், ம.ஜெகதீஸ்வரன், செல்வம், அடைக்கலநாதன்,து.ரவிகரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம் மற்றும்   பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் வலயக் கல்விப்பணிப்பாளர்கள்,பொலிஸார்,கடற்படை, இராணுவத்தினர் உட்பட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 இதன் போது மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை பாதிப்புகள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கடந்த 23 ஆம் திகதி முதல் இன்று 28 ஆம் திகதி வரை மன்னார் மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் 3 இல் 2  பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் தற்போது நீர் வெளியேறி வருகிறது.மன்னார் மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 723 குடும்பங்களைச் சேர்ந்த 67 ஆயிரத்து 928 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர்.3210 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 263 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் 69 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வரும் அத்தியாவசிய உதவிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. 

மேலும் தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவது குறித்தும்,வெளியேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம்,மற்றும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

மேலும் அவரச செலவினங்களுக்காக தற்போது 7 மில்லியன் ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளமை குறித்தும், சமைத்த உணவுகளை வழங்குதல் மற்றும் மேலதிகமாக தேவைப்படுகின்ற நிதி குறித்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த 23 ஆம் திகதி தொடக்கம் நீண்ட நாட்களாக உள்ளமையினால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்தும்,அந்த மக்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான உலர் உணவுகளை வழங்குவது குறித்தும்,கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதற்கு அமைவாக 37மில்லியன் ரூபாய் நிதிக்கான கோரிக்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதற்கான கோரிக்கையும் இன்றைய தினம் முன்வைக்கப்பட்ட போது

அதனைப்பெ ற்றுத் தருவதாக மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான, உபாலி சமரசிங்கவினால் உறுதியளிக்கப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்தகால போக பயிர்ச் செய்கை குறித்தும் அழிவுகள் குறித்தும் ஆராயப்பட்டது.இதன் போது 7 ஆயிரத்து 988 ஹெட்டயர் நிலப்பரப்பில் விவசாயம் முற்று முழுதாக அழிந்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சேதத்தை கணிப்பிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறித்து குறித்த கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது.மேலும் அழிவுக்கான காப்புறுதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக விதை நெல்லை பெற்றுக் கொடுக்க பாராளுமன்ற உறுப்பினர்களினால் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள கால் நடைகளை தேத்தாவடி பகுதியில்   மேய்ச்சலுக்கு  விடுகின்றமை வழக்கம்.இந்த நிலையில் இம்முறை விடப்பட்ட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் தற்போது பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாடுகளின் சேத விபரங்களும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றமை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு உரிய மேய்ச்சல் தரவை இல்லாமை குறித்தும்,அதனால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு உரிய தீர்வை வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது

 

 

Recommended For You

About the Author: ROHINI ROHINI