தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருவதுடன் பல கிராமங்கள் வீதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளன. காலநிலை மாற்றத்தால் மீனவர்கள் குறிப்பிட்ட தினங்கள் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில், குறிப்பாக மன்னார் பிரதேச செயலகப் பிரிவு மற்றும் மாந்தை மேற்கு 36 கிராம அலவலக பகுதிகளில் மழை நீரினால் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் , முருங்கன் , உயிலங்குளம் போன்ற இடங்களில் அதாவது கட்டுக்கரைக்குளம் பகுதிகளில் தாழ்ந்த பிரதேசங்களில் மழை நீரால் பெருந் தொகையான வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கழிவு நீர் வாய்க்கால்கள், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாயிகளினால், கவனம் செலுத்தி புனரமைக்கப்படாமையால் விதைக்கப்பட்ட விவசாய நிலங்கள் அழிவடைந்து வருவதாக விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பல கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்தும் சூழ்ந்தும் காணப்படுவதால் பலர் பாதுகாப்பாக தங்கள் உறவினர்கள் வீடுகளிலும், பாடசாலைகளிலும் தங்கி வாழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பேசாலை நடுக்குடா மாந்தை மேற்குப் பகுதிகளில்  இரவு வேளைகளில்,வாய்க்கால்களை வெட்டி, நீரை கடலுக்கு பாய்ச்சும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

எனவே கனமழையினால் ஏற்படும் அனர்த்தங்கள்  சம்பந்தமாக உடனடியாக மாவட்டச் செயலக அனர்த்த முகமைத்துவ பிரிவு 0232117117 . பிரதேச செயலகம் அல்லது கிராம அலுவலகத்திற்கு தெரியப்படுத்துமாறு மன்னார் மாவட்ட அரச அதிபர் க. கனகேஸ்வரன் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் மன்னார் மீனவர்கள், நேற்றிலிருந்து(23) எதிர்வரும் (27) வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், கடற்கரையோரங்களில் வைக்கப்பட்டுள்ள தங்கள் மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ளும்படியும் கடற்படையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI