இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி போராட்டத்துக்கு அழைப்பு: 144 தடை உத்தரவு அமுல்

ஊழல் வழக்கில் பிணை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விடுதலை செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக நாடாளாவிய ரீதியில் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாகூர், பெஷாவர் ஆகிய நகரங்களை தலைநகர் இஸ்லாமாபாத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன்மூலம் தலைநகருக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின்படி பொதுமக்கள், நான்கு அல்லது அதற்கு அதிகமானோர், பொது இடத்தில் மக்கள் கூடுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியில் கூடுவது குற்றமாக கருதப்படும்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

அவர் தனது பிரதமர் பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கானும் அவரது மனைவியும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய இரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் இம்ரான்கானுக்கும் அவரது மனைவிக்கும் வழங்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கில் பிணை வழங்குமாறு கோரி இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றில் இம்ரான் கான் மேன்முறையீடு செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்படட ஒரு மணித்தியாலத்திலேயே ராவல்பிண்டி பொலிசார் அவரை கைது செய்தனர். இம்ரான் கான் மீது பயங்கரவாதம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியூடவுன் பொலிஸ் நிலையத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அதன் அடிப்படையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

Recommended For You

About the Author: admin