மகாராஷ்டிரா தேர்தலே மிகப்பெரிய சதி: சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா தேர்தலே மிகப்பெரிய சதி என்று காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் சஞ்சய் ராவத் குற்றம் சுமத்தியள்ளார்.

இந்த தேர்தலின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தேர்தல் முடிவு மக்களின் தீர்ப்பு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20 ஆம் திகதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தம் 9.70 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில் 66.05 சதவீத வாக்குகள் பதிவானது.

1995, ஆம் ஆண்டு சட்டமன்ற தோ்தலுக்கு பின்னர் அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியில் பா.ஜ.க. 149 தொகுதிகளிலும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 81தொகுதிகளிலும் துணை முதலமைச்சர் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளில் போட்டியிட்டன.

எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் காங்கிரஸ் 101 தொகுதிகளிலும், சிவசேனா 95 தொகுதிகளிலும் , தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) 86 தொகுதிகளில் களம்கண்டன. இது தவிர, பகுஜன் சமாஜ் கட்சி 237 தொகுதிகளில் போட்டியிட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் பல அரசியல் மாற்றங்களைக் கண்ட மாநிலம் என்பதால், தற்போதைய சட்டமன்ற தோ்தல் முடிவுகள் நாடு முழுவதும் மிகவும் எதிர் பாா்க்கப்பட்டது. கருத்து கணிப்பு முடிவுகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறி இருந்தது.

அதன்படி, இன்று வாக்கு எண்ணிக்கை கருத்து கணிப்பு முடிவுகளை உறுதிப்படுத்துவது போல் அமைந்தன. காலை 08 மணிக்கு 288 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமானது.

ஆரம்பத்திலேயே அதிக தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகள் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை பெற தொடங்கியது.

காலை 09 மணி நிலவரப்படி 159 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிந்தது.

இந்நிலையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் சஞ்சய் ராவத், ஷிண்டே அணியின் அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் வெற்றி பெற்றது எவ்வாறு என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அனைத்து அரசு இயந்திரங்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin