மிகப்பெரிய வெள்ள அனர்த்தம் ஏற்படும்

“எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கிடைக்கவுள்ள கனமழை மிகப்பெரிய வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும்”
– இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறைத்தலைவரும் அங்கீகரிக்கப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு,

21.11.2024 வியாழக்கிழமை மதியம் 1.30 மணி

1. இலங்கைக்கு தெற்கே நிலவும் தற்காலிக காற்றுச் சுழற்சி காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை மேலும் சில நாட்களுக்கு தொடரும்.

2. எதிர்வரும் 23.11.2024 அன்று வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்.

இது 25.11.2024 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும். 26.11.2024 அன்று ஒரு புயலாக மாற்றம் பெறும் ( தற்போதைய நிலையில் இது ஒரு வலுக் குறைந்த புயலாகவே மாற வாய்ப்புண்டு). இது இந்தியாவின் நெல்லூருக்கு அண்மித்து கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது ( கரையைக் கடக்கும் இடம் மாற்றம் பெறும்).

3. இந்த புயல் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு மிக அருகாகவே நகரும். குறிப்பாக எதிர்வரும் 26ம் மற்றும் 27ம் திகதிகளில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு அருகில் கடற்பகுதிகளில் இந்த புயல் இருக்கும். இதனால் முன்னர் குறிப்பிட்டது போன்று மிகக்கனமழையும் வேகமான காற்று வீசுகையும், கடற் கொந்தளிப்பும் இருக்கும்.

4. எதிர்வரும் 26.11.2024 மற்றும் 27.11.2024 ஆகிய நாட்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிக முக்கியமான நாட்கள்.

5. நீண்ட கால முன்னறிவிப்பு அடிப்படையில் மீண்டும் ஒரு தாழமுக்கம் எதிர்வரும் 30.11.2024 அன்று வங்காள விரிகுடாவில் தோன்றும்.

6. தற்போது கிடைக்கும் கனமழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல தாழ்வான பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்க தொடங்கியுள்ளது.

7. இந்த நிலைமை நீடித்தால் எதிர்வரும் 25.11.2024 முதல் கிடைக்கவுள்ள கனமழை மிகப்பெரிய வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும்.

8. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அதிகாரிகள் அதிகளவிலான கவனம் செலுத்தி, கிடைக்கின்ற, கிடைக்கவுள்ள கனமழை தொடர்பில் போதுமான அளவிற்கு மக்களை விழிப்பூட்டுதல் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: RK JJ