நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நாளை (22.11.2024) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவிருந்த கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி புயலுடன்கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதன் காரணமாகப் பிற்போடப்பட்டுள்ளது.
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சியை சிறப்பான முறையில் நடாத்தி வந்துள்ளது.
இந்த ஆண்டும் மலர்க்கண்காட்சி இம்மாதம் 22ஆம் திகதி தொடங்கி 30ஆம் திகதி வரை சங்கிலியன் பூங்காவில் (கிட்டுப் பூங்கா) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இக்காலப்பகுதியில் புயலுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாகவே இம் மலர்க்கண்காட்சி பிற்போடப்பட்டுள்ளது.
புதிய திகதி பின்னர் அறியத்தரப்படும்.
எனினும், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் இருந்து இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக்கொள்வதற்கு ஏற்கனவே பதிவு செய்திருந்த அனைவரும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.