இலஞ்ச பொதி கொடுத்து வாக்குப்பிச்சை எடுக்கும் நிலையில் தமிழ்த் தேசிய கட்சிகள் – அங்கஜன் சாடல் 

இலஞ்ச பொதி கொடுத்து மக்களிடம் வாக்குக் கேட்கும் நிலைமைக்கு இன்று தமிழ்த் தேசியவாதிகள் தள்ளப்பட்டு விட்டனர் என ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

உடுப்பிட்டியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்;

என்னை தொலைபேசி வாயிலாக வயோதிபப் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு கேட்டார், கட்சி ஒன்று பொதி தருகிறோம் எமக்கு வாக்களியுங்கள் எனக் கேட்கின்றனர். அவ்வாறு நீங்களும் ஏதாவது தருவீர்களா? என அந்த அம்மா கேட்டிருந்தார்.

நான் அந்த பெண்மணிக்கு கூறிய ஒரு பதில், நான் 5வருடங்களாக உங்களுக்கும் ஊருக்கும் செய்த அபிவிருத்தியில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை, இந்த இறுதி நேர இலஞ்ச பொதியில் தான் உங்களுக்கு நம்பிக்கை என்றால் தயவு செய்து எனக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறினேன்.

நான் அடுத்த 5 வருடங்களும் உங்களுடன் தொடர்ந்து செயற்படவே ஆசைப்படுகிறேன். ஆனால் நீங்கள், எதுவுமே செய்யாத இறுதி நேரத்தில் இலஞ்ச பொதி வழங்கி வாக்கை சுரண்டுபவர்களுக்கு வாக்களித்தால் அடுத்த 5 வருடங்களுக்கு எதுவுமே இல்லாமல் தான் இருக்க வேண்டும்.

இன்று 68 கட்சிகளாக பிரிந்து நிற்கும் தமிழ்த்தேசிய கட்சிகளில் ஒன்று தான் இவ்வாறு இலஞ்சம் கொடுத்து வாக்குக் கேட்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது.

அவர்கள் எமது மக்களை அந்த நிலைமைக்கு பின்தள்ளி விட்டனர். மக்களை கஷ்டத்தில் வைத்திருந்தே தமது அரசியல் காலத்தை கடத்தலாம் என நினைத்துள்ளார்கள். இவர்களா தமிழர்களுக்குத் தேவை? மக்களே முடிவு உங்கள் கையில் என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Recommended For You

About the Author: RK JJ