எனக்கு மதுபானசாலை உள்ளது அல்லது நான் யாருக்கும் மதுபான சாலைக்கு சிபாரிசு செய்தேன் என்பதை மதுவரி திணைக்களம், ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட தரப்புக்கள் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தினால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன். இது பற்றி பேசுபவர்களுக்கு திராணி இருந்தால் தில் இருந்தால் கெத்து இருந்தால் செய்து காட்டுங்கள். நான் தயாராக இருக்கிறேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சவால் விடுத்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
என் மீதான மதுபானசாலை விவகாரம் தொடர்பான சர்ச்சை உள் கட்சியினராலேயே முதலில் எழுந்தது. அது வெளிக் கட்சியால் செய்யப்படவில்லை. தமிழ்ப் பொது வேட்பாளரை நான் ஆதரிக்க எடுத்த முடிவு காரணமாக அது உள் கட்சியினரால் செய்யப்பட்டது.
அதுக்காக சுமந்திரன் இம்முறை சிறீதரன் தேர்தலில் போட்டியிடக்கூடாது என கட்சியில் வாதிட்டார். ஊடகங்களுக்கும் சொன்னார். என்னை கேட்கக் கூடாது என என்னிடமும் தெரிவித்தார். அதனை நீங்கள் தீர்மானிக்க முடியாது. அதை கட்சி மத்திய குழுவே தீர்மானிக்கும் என்றேன்.
கிளிநொச்சியில் மதுபானசாலைகள் அதிகரித்துள்ளன . அந்த பக்கமும் உள்ளது. இந்த பக்கமும் உள்ளது என இதே இடத்தில் இருந்து முன்னாள் எம். பி. ஒருவர் கருத்து தெரிவித்தார். மதுபானசாலைகள் திறக்கும் போது அவரும் எம். பியாக தான் இருந்தார். அவர் அதனை தடுத்திருக்கலாமே? கிளிநொச்சிக்கு அவரும் எம். பி. தானே. வாக்கு கோருவதற்கு கிளிநொச்சிக்கு வந்து பிரசாரம் செய்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கிறார்கள் தானே. அந்த நேரம் நீங்கள் ஏன் கேட்டு தடுக்கவில்லை. அடுத்தவன் மீது சேறு பூச வேண்டாம். மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கி திறக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அங்கிருக்கும் ஒருவர் தான் பார்க்கவில்லை என குற்றஞ்சாட்டுவது அழகல்ல. நீங்களும் தானே இருந்தீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள். எடுத்த நடவடிக்கைகள் என்ன? நீங்கள் செய்த வழக்கு என்ன? முழங்காவில் மதுபான சாலைக்கு எதிரான வழக்கும் நாம் சொல்லியே போடப்பட்டது. அதனை விட நான் ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் கடிதம் எழுதியுள்ளோம். தேர்தலுக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம்.
எனக்கு மதுபான சாலை இல்லை என்பதை சத்தியக்கடதாசி மூலம் வெளிப்படுத்த தயார். யாராவது எனக்கு மதுபான சாலை உள்ளது அல்லது நான் யாருக்கும் மதுபான சாலைக்கு சிபாரிசு செய்தேன் என்பதை உறுதிப்படுத்துங்கள். மதுவரி திணைக்களம், ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட தரப்புக்களின் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தினால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன். இது பற்றி பேசுபவர்களுக்கு திராணி இருந்தால் தில் இருந்தால் கெத்து இருந்தால் செய்து காட்டுங்கள். நான் தயாராக இருக்கிறேன்.
இந்த தேர்தல் தமிழ் மக்களை பொறுத்தவரை பெரும் நெருக்குவாரமிக்கதாக உள்ளது.
எது எப்படியாயினும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் சிதையாது இருக்க வேண்டுமானால் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். கொழும்பு உள்ளிட்ட வெளியிடங்களில் இருப்பவர்கள் வாக்களிப்பு தினத்தன்று சொந்த இடங்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டும்.
உள்ளக பிரச்சினை ,வெளியக பிரச்சினை என ஆயிரம் இருந்தாலும்
தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களிப்பதும் காப்பாற்றுவதும் தமிழரது கடமை.
சென்ற முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு யாழில் போட்டியிட்ட போது 3 ஆசனங்களை பெற்றது. இம்முறையும் மூன்றுக்கு மேற்பட்ட ஆசனங்களை யாழில் பெறுவோம் – என்றார்.