அதிகூடிய பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றால் நாங்கள் ஏனைய பாராளுமன்ற பிரதிநிதிகளைக் கூட்டாக்குவதில் எமது செயற்பாட்டை முன்நகர்த்துவோம் – விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவிப்பு.
தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கருத்துத்தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை வேண்டி நிற்கின்றனர். அந்த மாற்றத்தை எமக்கு வாக்களிப்பதை விட வேறு எந்தத் தரப்புக்கு வாக்களித்தாலும் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
தமிழ் மக்கள் ஒரு தேசமாக வடக்கு கிழக்கிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது சியநிர்ணய உரிமை, தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வு தான் எமது தீர்வாக இருக்கும் என்பது அசைக்க முடியாது நம்பிக்கை.
13ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் தீர்வாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை, ஆனால் 13ஆவது திருத்தச் சட்ட அரசியலமைப்பிலே இருப்பதன் காரணமாக அதில் சொல்லப்பட்ட விடயங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. அதேநேரம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
ஆனால், அது தமிழ் மக்களின் தீர்வல்ல, அது பற்றி நாம் மிகத் தெளிவாக இருக்கிறோம். அதனை யாரும் எமக்கு திணிக்கவோ அல்லது ஏமாற்றவோ முடியாது என்பதில் நாம் மிக உறுதியாக இருக்கிறோம்.
ஒற்றையாட்சிக்குட்பட்டு எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையப்போவதில்லை. எமது தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஷ்டி பொறிமுறையைத் தான் நாம் எமது தீர்வாக முன்வைக்கிறோம்.
இரு தேசம் ஒரு நாடு என்பதில் இருந்து நாம் வெளியேறவில்லை, அதிலிருந்து நாம் வெளியேறினோம் என்று கூறுவது தவறான விடயம். இரு தேசம் என்பது பற்றி நாம் கூறிவந்த விடயம் இலங்கையில் இரு தேசம் மாத்திரம் தான் உள்ளது என்று.
இலங்கையில் இரு தேசம் இருக்கிறதா அல்லது மூன்று தேசங்கள் இருக்கிறதா என்பது வேறு விடயம். எம்மைப் பொறுத்த வரை தமிழ் மக்கள் ஒரு தேசம், அது அங்கீகரிக்கப்பட வேண்டும் அதில் எந்தவொரு விட்டுக் கொடுப்புக்கும் இடம் கிடையாது.
இங்கு பல தேசங்கள் இருக்குமாக இருந்தால் அதை நாங்கள் அங்கீகரிக்கத் தயாராகவே உள்ளோம். குறிப்பாக மலையக மக்கள் தாங்களும் ஒரு தேசம் என்று வேண்டுவார்களாக இருந்தால் மூன்று தேசங்களாக அங்கீகரிக்கப்படலாம், அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
இலங்கையில் எத்தனை தேசங்கள் இருக்கின்றன என்பது விவாதம் அல்ல, தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைந்த தேசமாக வாழ்ந்து வருகிறார்கள். அத் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும், அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது.
கேள்வி:- தமிழ் மக்களின் பிரச்சினையை, இனப்படுகொலை விவகாரத்தை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லுதல்
அல்லது தீர்வு விடத்தில் கூட்டுப் பொறுப்போடு செயற்படுவதா? அல்லது தனித் தனி குழுவாக பிரிந்து நின்று செயற்படுவது சிறந்ததா?
பதில்:- நிச்சயமாக கூட்டாகத் தான் இயங்க வேண்டும். நாம் ஒரு தரப்பாக தமிழ் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும். அது தான் தமிழ் மக்களுக்குப் பலம். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
தமிழ்த் தேசியப் பரப்பிலே தமிழ்த் தரப்புக்கள் பிரிந்திருப்பது உகந்த விடயமா?
இல்லை நிச்சயமாக பாதிப்பான விடயம். எம்மைப் பொறுத்த வரையிலே இத் தேர்தலில் வெல்வது உறுதி. இந்த வெற்றியின் பின்னர், வெல்லக் கூடிய தமிழ்த் தேசியப் பரப்பிலே போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியம் தான் தங்களது இலட்சியம் என்று சொல்லக் கூடிய கட்சிகளை ஒன்றாக அணி திரட்டி, பாராளுமன்றப் பிரதிநிதிகளையாவது அணி திரட்டி அடுத்த கட்ட அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடாக இருக்கிறது.
எதிர்வரும் தேர்தல் முடிவுகளின் பின் பலரும் எம்மைக் கேட்கும் கேள்வி அமைச்சரவையில் நாம் அமைச்சுப் பதவிகளை எடுப்போமா என்று? ஜே.வி.பினரின் நிலைப்பாடு மிகத் தெளிவானது, தமது கட்சியினருக்கு மாத்திரம் தான் அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படுமென்பது.
இந்தக் கேள்விக்கே இங்கு இடமில்லை. ஆனால், பாராளுமன்றத்திலே தமிழ் மக்களுக்குச் சார்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற பொழுது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றும் உகந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற பொழுது அல்லது தமிழ் மக்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தீர்மானங்கள் முன்வைக்கப்படுகின்ற பொழுது அதற்கு முழுமையான ஆதரவை நாங்கள் வழங்குவோம். தமிழ் மக்களுக்கு எதிரான விடயங்கள் அவர்களாலே நகர்த்தப்படுமாக இருந்தால் அதற்கு எதிரான கடுமையான எதிர்ப்பை நாங்கள் வெளியிடுவோம்.
கேள்வி:- தேர்தல்கள நிலவரங்களின் படி தமிழ்த் தேசிய கட்சிகள் ஒவ்வொரு ஆசனங்களைப் பெறும் நிலையே காணப்படுகின்றன, அவ்வாறான நிலையில் அனைவரும் கூட்டாக ஒரு கட்சியாக சேர வாய்ப்புள்ளதா?, உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்:- அவ்வாறான கூட்டொன்று உருவாக்கப்படுவது சாலச் சிறந்தது.ஆனால், அதற்கான வாய்ப்பிருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பில் மற்றைய கட்சிகளுடன் நான் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. முதலிலே இத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும், எமக்கு நம்பிக்கை இருக்கிறது இத் தேர்தலிலே நாம் அதிக வெற்றியை பெறுவோம்.
ஏனென்றால் தமிழ் மக்கள் பெரும் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தைக் கொடுக்கின்ற ஒரே சக்தி நாம் சார்ந்த தமிழ் மக்கள் கூட்டணியினர் மாத்திரம் தான். யாழ் தேர்தல் தொகுதியிலே அதிகூடிய ஆசனங்களை அதாவது மூன்று ஆசனங்களைப் பெறுவோம்.
அதிகூடிய பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றால் நாங்கள் ஏனைய பாராளுமன்ற பிரதிநிதிகளைக் கூட்டாக்குவதில் எமது செயற்பாட்டை முன்நகர்த்துவோம்- என்றார்.