யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று காலை துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர், சிரேஷ்ட சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷின் ஆதரவாளர்களை பொலிஸார் கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேவேளை, சம்பவத்தை அறிந்து அங்கு சென்ற வேட்பாளர் சுகாஷ், பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களை மட்டும் திட்டமிட்டு அச்சுறுத்துவது ஏன்?
இங்கே தேசிய மக்கள் சக்தியினர்(ஜே. வி. பி), ஈ.பி.டி.பினர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். அவர்களை ஏன் தடுக்கவில்லை? எங்கள் கட்சி ஆதரவாளர்களை மட்டும் தடுத்து நிறுத்தி துண்டுப் பிரசுரங்களை பறித்தது ஏன்? என்று கேள்விகளை தொடுத்திருந்தார்.
இதனையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்த பொலிஸார் தங்கள் தரப்பு செயற்பாடுகள் குறித்து விளக்கப்படுத்தியதோடு, சட்டத்தரணி சுகாஷிடம் தொலைபேசியை கொடுத்து பேசக் கூறினர்.
இதன் போது, துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க முடியாது என்று பொறுப்பதிகாரி மிரட்டினார். இருப்பினும், இன்று இரவு வரை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட எமக்கு உரித்துள்ளது. அதனை யாரும் தடுக்க முடியாது என்று சுகாஷ் காட்டமாக எடுத்துக் கூறியதை அடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொலிஸாரின் அத்துமீறல்கள் குறித்து கடும் கண்டனம் வெளியிட்ட சட்டத்தரணி சுகாஷ், ஜே.வி.பி. ஆட்சியிலும் பொலிஸாரின் அராஜகங்கள் தொடர்கின்றன- என்றார்.
பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் இலக்கம் 1 இல் சிரேஷ்ட சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் போட்டியிடுகிறார்.