சங்கு சின்னத்தில் போட்டியிடும் சசிகலாவின் வாக்குகளை திருடும் அல்லது திசை திருப்பும் நோக்கில் சாவகச்சேரியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடுகிறார் என்று குழப்பம் ஏற்படும் விதமாக இவ்வாறு பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சசிகலா ராவிராஜின் தேர்தல் தொகுதியான சாவகச்சேரியில் இன்றைய தினம் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் சசிகலாவின் ஆதரவாளர்கள் மற்றும் தென்மராட்சி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான சசிகலா ரவிராஜ் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டமையால் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் சங்கு சின்னத்தில் போட்டியிடுகிறார்.
கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலின் போதும் சசிகலா ரவிராஜின் வெற்றி திட்டமிட்டு மாற்றியமைக்கப்பட்டதாக மக்கள் மத்தியில் கோபமும் தமிழரசு கட்சியினர் மீது குறிப்பாக சுமந்திரன் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.