தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த வீதி பாவனைக்கான அனுமதி உண்மையான தீபாவளி பரிசு – அங்கஜன் இராமநாதன்

எமது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த யாழ்ப்பாணம் பலாலி வீதி- வயாவிளான் சந்தி- தோலகட்டி சந்தி வரையிலான இவ்வீதி மக்கள் பாவனைக்காக இன்றைய நாளில் அனுமதிக்கப்பட்டது உண்மையில் ஒரு தீபாவளி பரிசாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அங்கஜன் இராமநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தி குறிப்பில்,இது தொடர்பில் கடந்த கால ஜனாதிபதிகளிடமும் நாம் கோரிக்கைகள் வைத்து, பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதாக எமக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை புதிய ஜனாதிபதியிடமும் இவ்வீதி உள்ளிட்ட உயர்பாதுகாப்பு வலய வீதிகளின் பாவனை அனுமதி தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். இன்று அவற்றில் ஒரு வீதி 34 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது எம்மக்களின் ஏனைய நீண்டகால கோரிக்கைகளுக்கான தீர்வுகளை எட்டக்கூடிய நல்ல சமிக்ஞையாக அமைந்துள்ளது. இவ்வீதியின் மக்கள் பாவனையை சாத்தியமாக்கிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக அவர்களுக்கும், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் எமது மக்கள் சார்பிலான நன்றிகள் என்றுள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி வீதி – வயாவிளான் சந்தி -தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக நேற்று காலை ஆறு மணி முதல் இருந்து அனுமதிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: S.R.KARAN