அறுகம்பே சுற்றுலா: வழமைக்குத் திரும்பியது

அறுகம்பேவில் சுற்றுலாப் தளங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு விடுக்கப்பட்ட குண்டுத்தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மக்களின் இயழ்பு வாழ்க்கை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் இடம்பெறுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் மிகவும் பிரபல்யமான சுற்றுலாத் தளமாக உள்ள அறுகம்பேவை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்கு அமெரிக்க பிரஜைகள் எவரையும் செல்ல வேண்டாம் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த புதன்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகள் தமது பிரஜைகளை அறுகம்பேவுக்குச் செல்ல வேண்டாமென தடைவிதித்திருந்தன.

இந்த நிலையில், பொலிஸாரார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து இங்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இங்கு இஸ்ரேலிய பிரஜைகளை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்த திட்டமிட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியிருந்தது. இது தொடர்பில் பயங்கரவாத விசாரணை பிரிவினர் மூன்று சந்தேகநபர்களை கைதுசெய்ததுடன், சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் தடுப்பு காவல் உத்தரவினை பெற்றுள்ளனர்.

அறுகம்பேவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் சுற்றுலாச் செயல்பாடுகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால் தற்போது வழமை போன்று சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்கள் சேவைகள் இடம்பெறுவதுடன், இங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கையும் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இஸ்ரேலியர்கள் தங்கியுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் குறித்த தினசரி அறிக்கைகளை பொலிஸார் திரட்டி வருவதுடன், சுற்றுலா விடுதிகளில் இஸ்ரேலியர்கள் தங்கியிருந்தால் அவ்விடுதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

”கடந்த இரண்டு நாட்களாக தமது தொழில்துறை கடுமையான சவாலை எதிர்கொண்டிருந்தது. நீண்டகாலம் தாம் எந்த சவால்களை எதிர்நோக்க நேரிடும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தற்போது நிலைமை சீராகியுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் இடம்பெறுகிறது.” ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin