பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பை இது உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாம் கட்ட கடனை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்களில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தப் பின்புலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை மேற்கொள்வது குறித்து புதிய அரசாங்கம் யோசனைகளை முன்வைத்துள்ளது.
கடந்த 03,04ஆம் திகதிகளில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பிலேயே அரசாங்கம் தமது யோசனைகளை முன்வைத்திருந்தது.
இவ்வாறு இரு தரப்புக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் தொடரும் பின்புலத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இணைந்து வாஷிங்டனில் நடத்திய ஊடகச்சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன், மேலும் கூறியதாவது,
”புதிய அரசாங்கம் அண்மையில் பதவியேற்ற பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்றை கொழும்புக்கு அழைத்து கலந்துரையாடல்களை நடத்தியது.
புதிய அரசாங்கம் மற்றும் அதன் குழுவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மிகவும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். இந்த வாரம் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் – உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தொடரிலும் இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
2022ஆம் ஆண்டில் பாரிய பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்திருந்த இலங்கை கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு நீண்ட தூரம் வந்துள்ளது.
கடந்த நான்கு காலாண்டுகளில் வளர்ச்சி நேர்மறையானதாக இருந்தது. பணவீக்கம் குறைந்தது. புதிய அரசாங்கம் இந்த செயல்பாட்டை முன்னோக்கி கொண்டுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.
விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் புதிய அரசாங்கம் சமூகப் பாதுகாப்பு தொடர்பிலான சில சிபாரிசுகளை முன்வைத்துள்ளது. அவை தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கை அரசாங்கத்தின் சில நகர்வுகள் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதால் விரைவில் வரவிருக்கும் மூன்றாவது மதிப்பாய்வை நோக்கி வேகமாக செல்ல முடியும்.
அரசாங்கம் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் உடன்படிக்கைகளை எட்டியுள்ளது.கொள்கையளவில் தனியார் கடன் வழங்குநர்களுடனும், அடுத்த கட்டமாக அனைத்து கடன் வழங்குநர்களுடனும் ஒரு முறையான ஒப்பந்தத்தை எட்ட வேண்டியுள்ளது. இலங்கை வலுவான மற்றும் நிலையான மீட்சியின் பாதையில் செல்வதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.”என்றார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்தின் சமகால செயல்பாடுகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளதால் விரைவில் இடம்பெறும் மூன்றாம் மதிப்பாய்வின் பின்னர் மூன்றாம் கட்ட கடனை பெற்றுக்கொள்வதற்காக வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.