ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் எவ்வாறான அணுகுமுறைகளை பின்பற்றி வருகிறதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் தரப்பிடம் கேட்டறிந்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தமிழ் தரப்பினரை கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட தமிழ்க் கட்சிகள் ஏன் பிரிந்து நிற்கின்றன? இவர்களால் ஒற்றுமையாகச் செயற்பட முடியாதா? அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா? என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு தமது தரப்பு நியாயங்களை தமிழ் தரப்பினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமது ஆணையை தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக ஒருபோதும் செயற்படப்போவதில்லை எனவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் தரப்பினரிடம் உறுதியளித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப பொறுப்புக்கூறல் பொறிமுறைகளின் அவசியம், நீடித்த அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கத்திற்கான சிறுபான்மையினரின் நீண்டகால வாதங்கள் இலங்கையில் நீடித்த அமைதியை உறுதி செய்யும் என்றும் மாற்றத்திற்கான மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும் தமிழ் தரப்பினடம் ஜூலி சங், எடுத்துரைத்துள்ளார்.