யாழ்ப்பாணத்தில் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளாது உயிரிழந்தவர்களின் சடலங்களை விடுவிக்க, திடீர் மரண விசாரணை அதிகாரிகள் அதிக பணம் வசூலித்து வருவதாக பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சடலத்தை உரிமையாளருக்கு வழங்க 50,000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த ஒருவரின் உறவினர்கள் வழங்கிய முறைபாட்டிற்கமைய பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் போது குறித்த அதிகாரியின் வங்கிக் கணக்கை பரிசீலித்த சந்தர்ப்பத்தில் மோசடியான முறையில் பெற்றுக்கொண்டதாக சந்தேகிக்கப்டும் 25 இலட்சம் ரூபாய் காணப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணி புரியும் அனைத்து மரண பரிசோதனை அதிகாரிகளும் சடலங்களை விடுவிக்க இலஞ்சமாக பணம் பெற்றுக்கொள்வதாக சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மரண விசாரணை அதிகாரியை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.