“வழக்குகளைத் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்து இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்கச் சிலர் கனவு காண்கின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக அதிருப்தியாளர்கள் எத்தனை வழக்குகளையும் தாக்கல் செய்யலாம். ஆனால், அந்த வழக்குகளை நீதிமன்றத்தில் நாம் முறியடித்தே தீருவோம்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவின்போது எம்மால் பிரேரிக்கப்பட்ட பல வேட்பாளர்களைப் புறந்தள்ளி சிலர் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து வேட்பாளர்களை நியமித்துள்ளமை உண்மைதான். அதனை நான் ஏற்கவில்லை. அதனால்தான் இம்முறை தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இருந்து விலகி நிற்கின்றேன். ஆனாலும், நான் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகவில்லை. தமிழரசுக் கட்சியை முடக்க,சிதைக்க,அழிக்க நாம் ஒருபோதும் இடமளியோம்.
எமது கட்சியைப் பாதுகாக்க நாம் எத்தனையோ தியாகங்களைச் செய்துள்ளோம். அதனைச் சிலர் இன்று மறந்து செயற்படுகின்றனர். அதுதான் எமக்கு வேதனையளிக்கின்றது.” – என்றார்.