இந்தியா, ஹரியானா மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் 96 சதவீதமானோர் கோடீஸ்வரர்கள் எனவும் 12 சதவீதமானோர் மீது குற்ற வழக்குகள் உள்ளமையும் தேர்தல் உரிமைகள் தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அவ் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
‘ஹரியாணா பேரவை 90 உறுப்பினர்களைக் கொண்டது. அதன்படி, அண்மையில் தெரிவானவர்களில் 86 சட்டமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வர்கள். கடந்த 2019ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 93 சதவீதமாக இருந்தது.
இச் சட்டமன்ற உறுப்பினர்களில் 44 சதவீதமானோர் ரூபாய் 10 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளதுடன் 2.2 சதவீதமானோர் ரூபாய் 20 இலட்சத்துக்கும் குறைவான சொத்துக்களை வைத்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 24.97 கோடி. 2019ஆம் ஆண்டில் ரூபாய் 18.29 கோடியாக இருந்தது.
அதன்படி சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 59 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி தெரிவு செய்யப்பட்ட 12 சட்டமன்ற உறுப்பினர்கள் அதாவது 13 சதவீதமானோர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கை கடந்த 2019ஆம் ஆண்டில் 7 ஆக இருந்தது.
அதன்படி 19 சதவீத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், 6 சதவீத பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 67 சதவீத சுயேட்சை உறுப்பினர்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன.
அதுமட்டுமின்றி இவர்களுள் 63 சதவீதமானோர் பட்டதாரிகள் அல்லது உயர் பட்டம் பெற்றவர்கள். 29 சதவீதமனோர் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் கல்வி கற்றுள்ளனர்’ என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.