முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மீள அழைக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக குறிப்பிட்ட தொகையிலான பாதுகாப்புப் படையினர் கணிசமான எண்ணிக்கையிலான கமாண்டோக்களையும் இராணுவத்தினரையும் ஈடுபடுத்தி வருகின்றமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காக 110 கமாண்டோக்கள் ஈடுபடுத்தபட்டுள்ள நிலையில் அவர்கள் கோட்டபய ராஜபக்சவுக்காக வழங்கப்பட்டுள்ள சாதாரண பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு மேலதிகமானவர்கள் ஆவர்.
இதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்சவுக்கு 180 கமாண்டோக்கள் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுள் 70 பேர் கடந்த காலங்களில் நீக்கப்பட்டிருந்தனர்.
ரணில் விக்கிரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புக்காக தற்போது 60 கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அதுவும் சாதாரண பாதுகாப்பு உறுப்பினர்களை விட மேலதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக சாதாரண பாதுகாப்பு உறுப்பினர்களை விட மேலதிகமாக 36 கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகளவிலான கமாண்டோக்கள் மற்றும் ஏனைய இராணுவ படையினரை நீக்குவது தொடர்பில் ஒக்ரோபர் மாதம் 02ஆம் திகதி கூடிய பாதுகாப்பு சபை தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட குறித்த தீர்மானம் தொடர்பிலான தகவல்கள் எதுவும் அறியக்கிடைக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கமாண்டோக்கள் மற்றும் ஏனைய இராணுவப் பாதுகாப்புக் குறைப்பு தொடர்பில் இலங்கை இராணுவத்திற்கும் அறிவித்தல்கள் எதுவும் கிடைக்கவில்லை என அறியக்கிடைத்துள்ளது.
”நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பிரதி அமைச்சர்கள், மாகாண சபை பிரதிநிதிகள் மீள அழைக்கப்படுவார்கள்” என செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி இலங்கை பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ள பிரமுகர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.
சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதி சபாநாயகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு தொடரும் என அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.