ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தனது மொஸ்கோ விஜயத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் குறைந்தது இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் போர் மண்டலத்தில் சிக்கிய ஏராளமானவர்கள் ஏமாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக மொஸ்கோ சென்றிருந்த பிரதமர் மோடி, கிரெம்ளினில் புடின் நடத்திய தனிப்பட்ட விருந்தில் கலந்துகொண்டு இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கள் இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவித்து, அவர்கள் நாடு திரும்புவதற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ரஷ்ய போர் முனையில் பல இலங்கையர்களும் போராடி வருகின்றனர், இது குறித்து விவாதிக்க இலங்கை தூதுக்குழு அண்மையில் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது.
இதன்போது, ரஷ்ய அதிகாரிகளுடன் இலங்கைப் பிரதிநிதிகள் பல சுற்றுக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
ரஷ்ய போரில் பங்கெடுத்துள்ள இலங்கையர்களில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதா அறியமுடிகின்றது.
மேலும், ரஷ்ய போரில் ஈடுபட்டுள்ள 464 பேர் குறித்து முறைப்படு கிடைத்துள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், ரஷ்ய போரில் கொல்லப்பட்ட இலங்கையர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அந்நாட்டு அரசாங்கம் இணைக்கம் வெளியிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ரஷ்ய ஆயுதப் படைகளில் இணைந்துள்ள சுமார் ஆயிரம் இலங்கை இராணுவ வீரர்களை நாட்டிற்கு அழைத்து வருவதில் புதிய சவால்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவுக்காக போராடும் இலங்கைப் படையினர் பலர் உத்தியோகபூர்வ வழிகள் மூலம் ரஷ்ய குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும் அவர்கள் ரஷ்ய கடவுச்சீட்டை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.