ஊடகங்கள் பொறுப்பற்று செயற்படுகின்றதா?: சத்தியமூர்த்தி குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பில் ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“யாழ். போதனா வைத்தியசாலையில் தினசரி விடுதிகளிலும், வெளிநோயாளர் பிரிவுகளிலும், மற்றும் பல்வேறு கிளினிக் பகுதிகளிலும் 5000 பேர் சிகிச்சை பெறக்கூடிய வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றது.

இவ்வைத்தியசாலை இயக்குவது மிகவும் சிரமமான விடயம்.

இந்த வைத்தியசாலை பொதுமக்களின் நம்பிக்கைக்கும் அவர்களுடைய சுகாதாரம் சம்பந்தமான சிக்கலான விடயங்களுக்கும் பதில் அளிக்கின்ற ஓர் நிறுவனம்.

இங்கே 2500க்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கடமையிலே இருக்கின்றார்கள்.

இவ்வாறு சுறுசுறுப்பாக அர்ப்பணிப்போடு கடமையாற்றுகின்ற இந்த நிறுவனம் பற்றிய உங்கள் கருத்துக்களை பொறுப்போடு எடுத்துரைப்பது மிகவும் முக்கியம்.

தனிப்பட்ட நபர்களின் கருத்தை இந்த நிறுவனத்தின் மீது பாரிய குற்றச்சாட்டாக முன்வைத்து இதன் சேவையை மழுங்கடிக்கின்ற போது பொதுமக்கள் சேவையை சிறப்பாக பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்ளுவார்கள்.

ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சோர்வடைந்தால் அவர்களால் சிறப்பாக கடமையாற்ற முடியாத நிலை ஏற்படும்.

வேலைப்பளு காரணமாக சமூக ஊடகங்களில் வருகின்ற எல்லா விடயங்களையும் பார்வையிட்டு இவற்றிற்கெல்லாம் பதில் அளிக்க முடியாத நிலை காணப்படுகின்றது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஆகவே, பொதுமக்களின் வைத்தியசாலை பற்றி எல்லோரும் பொறுப்பணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அவரின் இந்த பதிவுக்கு பலரும் எதிர்வினையாற்றியுள்ளனர்.

அண்மையில் சாவக்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து, யாழ். போதனா வைத்தியசாலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களிலும், யாழ். போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் குறித்து செய்தி வெளியிட்டிருந்த ஊடகம் ஒன்றை புறக்கணிக்க வேண்டும் என்று வைத்தியர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin