கருத்தரித்து 22 வாரங்களுக்குப் பின்னர் கருக்கலைப்பு செய்வது கொலைக்குற்றத்திற்கு சமமானது என கருதப்படும் சட்டமூலத்திற்கு எதிராக பிரேசிலில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரேசிலின் சாவோ பாவுலோ நகரின் முக்கிய வீதிகள் ஊடாக பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பல தசாப்தங்களில் பிரேசிலில் பெண்களின் இனப்பெருக்க உரிமைகளுக்கான மிகவும் அடக்குமுறையான அணுகுமுறையாக இந்த சட்டமூலம் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வயது வேறுபாடின்றி சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரையில் அனைவரும் ”குழந்தைகள் தாயல்ல, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குபவர் தந்தையல்ல” எனும் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகம், கருச்சிதைவு அல்லது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது மாத்திரமே பிரேசிலில் கருக்கலைப்பு நடவடிக்கைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையிலே, கருத்தரித்து 22 வார காலத்திற்குப் பின்னர் கருக்கலைப்பு செய்யப்படுவது கொலையாக கருதப்படும் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் நிலையில், 22 வார கர்ப்பத்தின் பின்னர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்ணொருவரும் கருக்கலைப்பு செய்வது கொலையாக கருதப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த சட்டமூலம் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளியை விட ஒரு பெண்ணை அதிகபட்ச தண்டனையுடன் தண்டிக்க விரும்பும் பைத்தியக்காரத்தனமானது என ஜி7 மாநாட்டிலும் கருத்து வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.