நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து T20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக நியூசிலாந்து அணியின் நட்சத்திரவீரர் டிரெண்ட் போல்ட் அறிவித்துள்ளார்.
2024 சி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறாமல் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
உகாண்டா அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியின் பின்னர், இது தனது கடைசி டி20 உலகக் கோப்பை என்று டிரெண்ட் போல்ட் அறிவித்துள்ளார்.
போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
“இதுவே எனது கடைசி T20 உலகக் கிண்ணமாக இருக்கும். நடப்பு T20 உலகக் கிண்ணத்தில் நாங்கள் விரும்பிய தொடக்கத்தை கொடுக்கவில்லை. சூப்பர் 8 சுற்றுகளில் இருந்து வெளியேறியது ஜீரணிக்க முடியாத ஒன்று.
எங்களால் முன்னேற முடியாமல் போனதில் நாங்கள் ஏமாற்றம் அடைகிறோம். கடந்த பல ஆண்டுகளாக எங்களின் பதிவுகள் சிறப்பாக இருந்திருந்தது.
துரதிர்ஷ்டவசமாக, கடந்த வாரம் எங்களால் சிறப்பாக விளையாட முடியவில்லை ” என தெரிவித்தார்.
இதுவரை 60 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியுள்ள டிரெண்ட் போல்ட் 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 17 T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.