உலகம் முழுவதும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த முடியாமல் சர்வதேச நாடுகள் கூட திணறிவருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
இதனடிப்படையில், தற்போது, இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் தமிழகத்தில் எந்தளவு சிறுவர் துஷ்ப்பிரயோகங்கள் இடம்பெறுகின்றது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.
இது தமிழகத்தின் வளர்ச்சிப்பாதையின் பின்னடைவை எடுத்துக்காட்டுவதாகவும் சமூக விமர்சகர்கள் தற்போது கருத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டுக்கான குற்றக்கணக்கீட்டு அறிக்கையின்படி (Crime in India-2022) அந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,62,449 குற்றங்கள் சிறுவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் 63, 414 சம்பவங்கள் போக்சோ சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ளன.
அதாவது, குழந்தைகளுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் 10 குற்றங்களில் நான்கு பாலியல் வன்கொடுமை தொடர்பானவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒட்டுமொத்த போக்சோ வழக்குகளில் கிட்டத்தட்ட சரிபாதியானவை உத்தரப் பிரதேசம் (8,136), மகாராஷ்டிரம் (7,572), மத்தியப் பிரதேசம் (5,996), தமிழ்நாடு (4,968), ராஜஸ்தான் (3,731) ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
அடுத்த இடங்களில் கேரளாவும் (3,334) கர்நாடகமும் (3,155) உள்ளன. தென் மாநிலங்களில் தமிழ்நாடுதான் இத்தகைய குற்றங்களில் முதலிடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.