சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவு

யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கிழ் சிறைவைக்கப்பட்டமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இன்று (23) பிற்பகல் 2:15 இற்குள் தாக்கல் செய்யுமாறு சென்னை பொலிஸ் ஆணையருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் பொலிஸார் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டில் கடந்த 4ஆம் திகதி யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை பொலிஸாரினால் தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக்கூறி சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து, சென்னை மாநகர பொலிஸ் ஆணையர் கடந்த 12 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை இரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் எனக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகளான ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைவைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டதுடன், விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin