இந்திய பயிற்சியாளர் பொறுப்பு தனது லைஃப்ஸ்டைலுக்கு செட் ஆகாது: ரிக்கி பாண்டிங்

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பொறுப்பு தனது லைஃப்ஸ்டைலுக்கு செட் ஆகாது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு பேரவை (பிசிசிஐ) இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கியுள்ளது.

இம்முறை வெளிநாட்டு பயிற்றுவிப்பாளரை நியமிப்பது தொடர்பில் இந்திய கிரிக்கெட் பேரவை ஏற்கனவே தீர்மானித்திருந்த நிலையில், ஸ்டீபன் பிளெமிங், ரிக்கி பாண்டிங் உள்ளிட்டவர்களின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் இது தொடர்பில் கருத்தொன்றையும் வெளியிட்டுள்ளார்.

“எனது ஆர்வம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஐபிஎல் சீசனின் போது இது தொடர்பாக சிறிய அளவிலான உரையாடல் நடந்தது. எனக்கும் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை கவனிக்க வேண்டுமென்ற விருப்பம் உள்ளது.

ஆனால், எனது வாழ்வில் உள்ள சில விஷயங்களை நான் கவனிக்க வேண்டும்.

அதில் எனது குடும்பமும் அடங்கும். இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை கவனித்தால் ஐபிஎல் அணியுடன் இருக்க முடியாது. இது அனைவரும் அறிந்ததே.

அதேபோல தேசிய அணியின் பயிற்சியாளர் என்றால் ஆண்டுக்கு 10 அல்லது 11 மாத காலம் பணியாற்ற வேண்டி இருக்கும்.

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு வந்துள்ளதாக எனது மகனிடம் சொன்னேன். அவர் அதை ஏற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார். அந்த அளவுக்கு இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் கிரிக்கெட்டை அவர் நேசிக்கிறார். ஆனாலும் இப்போதைக்கு எனது லைஃப்ஸ்டைலுக்கு அது செட் ஆகாது” என பாண்டிங் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin