காற்றாலையும் கனிம அகழ்வும்: மன்னார்த் தீவு மயான பூமி ஆக்கப் போகின்றதா?

இலங்கையின் மேற்கு மூலையில், இந்தியாவுக்கு மிகவும் அண்மித்த – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த – இயல்பான இயற்கை சூழமைவுகளைத் தன்னகத்தே கொண்ட சுதேசிய குடிமக்கள் செறிந்து வாழும் மாவட்டம் மன்னார் ஆகும்.

இது, நீர் வளமும், நிலவளமும், கடல் வளமும், கனிம வளமும் கொண்ட அழகிய வரலாற்று அம்சங்களையும், வரலாற்று படிமங்களையும் தன்னகத்தே கொண்டதாகும்.

இது, 2002.25 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைக் கொண்டது. ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியது. 48,129 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 62,129 பேர் இங்கு ஜீவிக்கின்றனர்.

இதில் 67,376 இஸ்லாமியர்களும், 65ஆயிரத்து929 கத்தோலிக்கர்களும், 27 ஆயிரத்து 796 இந்துக்களும, 855பௌத்தர்களும் அடங்குகின்றனர்.

இலங்கையில் எங்கும் இல்லாத வகையில் அதி தீவிர மத உணர்வு உடையவர்களையும், வாழ்வியலின் சகல அம்சங்களையும் மத கோட்பாட்டுடன் இணைக்கும் அடிப்படைவாதிகளையும் உள்ளடக்கி, பகுத்தறிவை சற்றும் உணர்ந்து பார்க்காத சமூக கட்டமைப்பை செறிவாகக் கொண்ட – மத முரண்பாட்டுக்குப் பெயர் போன – மாவட்டமும் இதுவாகும்.

அரசியல் தலைமைத்துவம் என்பது இங்கே மிக நீண்ட காலமாக வெற்றிடமாகவே உள்ளது. இராயப்பு சோசப் ஆண்டகையின் மறைவுக்கு பின்னர் உரிமைக்குரலும் நலிவுற்றே காணப்படுகின்றது.

கனிம படிமங்கள், எரிபொருள் ஆய்வுகள் என பலவளமுள்ள இடத்தை பொருள்முதல்வாத உறவில் உள்ள பல சர்வதேச கோப்பரேட் நிறுவனங்கள் வளச்சுரண்டலுக்கான தமது கழுகு பார்வைக்குள் மன்னாரை புகுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது அதற்குரிய காலம் கனிந்து விட்டது.

மன்னார்தீவு என்பது புவியியல் கட்டமைப்பு ரீதியாக மிகவும் பலவீனமான தீவு ஆகும். சாதாரண தரைத் தோற்ற நில அமைப்பை விட மன்னார்த்தீவு மிகவும் தாழ்வானது. ஒரு பேசின் போன்றது.

ஐம்பது ஆண்டுகளில் அழியும் தீவுகளில் மன்னாரும் ஒன்று என யுனஸ்கோ நிறுவனம் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணத்தால்தான் மன்னார்த் தீவில் மூன்று மாடிக்கு மேல் கட்டடங்கள் அமைப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படுவதில்லை.

மிகவும் பலவீனமான தீவு என்பதால் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள கூடிய வகையில் வலிமை குறைந்த தீவாகும்.

மிகக் குறுகிய நிலப்பரப்பை கொண்ட தீவு என்பதால் இயற்கை பேரிடர்களான நில அதிர்வு, சுனாமி, புயல், பெருவெள்ளம் போன்றவற்றை எதிர்கொள்ளக்கூடிய வலிமையற்ற தீவாகவே காணப்படுகிறது என பல துறை சார்ந்த வல்லுனர்களால் காலத்துக்கு காலம் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இதற்கு மாறாக அரசு தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறது.

நிலை பெறுதகு வலு அதிகார சபை 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி 1852/2 இலக்கமுடைய வர்த்தமானி மூலம் 202 ஹெக்டேயர் நிலப்பரப்பு கையகப்படுத்த அறிவித்தல் வெளியாகி இருந்தது.

இதற்கு முதலில் இலங்கை மின்சார சபையால் தம்பவனி என்னும் பெயரில் காற்றாலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு காற்றாலைக்கு ஏழு ஏக்கர் நிலம், கையகப்படுத்தப்படுகிறது 30 காற்றாலைகள் தாழ்வுபாட்டில் இருந்து நடுக்குடா வரை அமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு காற்றாலையிலிருந்து 3.4,5 மெகாவாட் மின்சாரம் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. 30 காற்றாலையிலும் இருந்து 102.5 மெகாவாட் மின் உற்பத்தியாகிறது.

இதன் இரண்டாவது பகுதி 21 காற்றாலை 50 மெகாவாட் மின்சாரம் பெறுவதற்குரிய பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஆனால் மக்களின் எதிர்ப்பாலும், கரையோர மீன்பிடி பாதிக்கப்படுவதாக மீனவர்களின் தொடர்ச்சியான குற்றச்சாட்டும் போராட்டத்தாலும் 11 காற்றாலை அமைப்பதிலிருந்து இலங்கை மின்சார சபை பின்வாங்கியுள்ளது. எஞ்சிய 10 காற்றாலை மாத்திரமே அமைக்க உள்ளது.

இதில் சௌத்பார் மற்றும் தோட்டவெளி பகுதியில் LTL தனியார் கம்பனி நான்கு காற்றாலைகள் அமைக்க அனுமதி கோரி உள்ளது.

இதேபோல் மன்னார் சிலாவத் துறையில் இருந்து முள்ளிக்குளம் வரை 34 காற்றாலையில் இருந்து 100 மெகாவாட் மின்சாரம் பெறுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறே நறுவிலிக்குளம் பகுதியில் வின்போஸ் தனியார் நிறுவனம் ஆறு காற்றாலைகள் அமைத்து 2.5 மெகாவாட் மின்சாரம் வீதம் 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெறுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பகுதியில் வின்போஸ் தனியார் நிறுவனம் 16 காற்றாலைகளை அமைத்து 2.5மெகாவாட் வீதம் 40 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றது.

தனங்கிளப்பில் LTL தனியார் நிறுவனம் எட்டுக்காற்றாலைகளை அமைத்து 2.5 மெகாவாட் மின்சாரம் விதம் 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாக்குகிறது.

பூநகரிப்பிரதேசத்திலும் அதானி கிரீன் எனர்ஜி சிறிலங்கா நிறுவனம் 250 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய காற்றாலை அமைக்க உள்ளது.

தலைமன்னார் வடக்கிலிருந்து எருக்கலம்பட்டி மேற்கு வரை அதானி கிரீன் எனர்ஜி சிறிலங்கா நிறுவனம் 52 காற்றாலைகளை அமைத்து 250 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவுள்ளது.

ஏறக்குறைய 442 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்யவுள்ளது. எந்தக் கேள்விக் கோரலும் இன்றி அதானி நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தங்களை அரசு வழங்கியுள்ளது.

இவர்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஒரு யூனிட் எட்டு அமெரிக்க டொலருக்கு வாங்குவதாகவும் ஒப்பந்தமாகியுள்ளது.

ஆனால் சந்தையின் அதன் பெறுமதி மிகவும் குறைவானது. அதனால் அரசுக்கு ஆண்டுதோறும் 3369மில்லியன் இழப்பு ஏற்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் அதானி நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபா இலாபமீட்டவுள்ளது.

இதில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை உள்ளூர் எதிர்ப்புகள் பற்றி கிஞ்சித்தும் சிரத்தை கொள்ளப்படவில்லை.

முறையாக கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதானி நிறுவனத்துக்கு சார்பாகவே இதன் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய சுற்றாடல் அதிகார சபை என்பது ஓர் ஊழல் அதிகார சபை. இதன் இரண்டு முன்னாள் தலைவர்கள் லஞ்சம் பெற்றமையால் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே அவர்களது அறிக்கையின் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் என்பது ஊரறிந்த உண்மை.

இந்த அறிக்கையும் தகவல்களும் முற்றிலும் முன்னுக்குப் பின் முரணானவையும், தவறானவையும், பொய்யானவையும், ஒரு பக்க சார்புடையவையுமாகும்.

மாற்றுக் கருத்துக்களையோ, மாற்றுஇடம் பற்றிய முன்மொழிவையோ, முறையாகப் பேணவில்லை. விலை மனுவும் கோரவில்லை.

ஆகவே இது பாரிய முறைகேடான – சட்டவிரோதமான – செயல்பாடாகும் என்கிறார் கலாநிதி ஜகத் குணவர்த்தன.

இலங்கைக்கு வரும் புலம்பயர் பறவைகளால் 10 இலட்சம் வரையான பறவைகள் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப் பகுதியில் தங்கி இருக்கின்றன.

ஆகவே புலம்பெயர் பறவைகள் வராத காலப்பகுதியில் ஆய்வறிக்கைகளை மேற்கொண்டு விட்டு, புலம்பெயர் பறவைகளுக்கு இடையூறு இல்லை என்று கூறியுள்ளனர்.

இது பெரும் தொழில்நுட்ப தவறாகும். அத்துடன் இவர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பகல் பொழுதில் நடந்து சென்றே ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

அதனால் ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள் இரவு நேரத்தில் பறக்கின்றமையை செய்மதி தொழில்நுட்பத்தினூடாக விஞ்ஞான ரீதியில் சுட்டிக்காட்டி உள்ளோம் என்கிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியர் சம்பத் செனவிரத்தின

இவற்றில் இரண்டரை இலட்சம் தொடக்கம் 4 இலட்சம் வரையான பறவைகள் காணப்படுகின்றன. அவை பகலில் வனப்பகுதியில் தங்கி இருந்து, இரவு நேரத்தில் பறக்கும் பறவைகள்.

அவை தொடர்பில் இவர்களது ஆய்வறிக்கையில் எங்கும் கோடி காட்டப்பட வில்லை எனவும், அது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வான் பரப்பில் பறவைகளுக்குப் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் மிகவும் வேடிக்கையான – நகைச்சுவையான- முறையில் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் காணப்படுகிறது.

அதானி நிறுவனத்திற்கு காற்றாலை திட்டத்தை வழங்க வேண்டும் எனும் நோக்கிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதா எனவும் பேராசிரியர் சம்பத் செனவிரத்ன கேள்வி எழுப்புகிறார்.

காற்றாலைகளில் பறவைகள் மோதுவதை தடுப்பதற்கான சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பான அறிக்கையை ரமணி எல்லே பொல தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்தது.

அதில் பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தேவக்க வீரக்கோன், மூலிகைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக கலாநிதி ஹிமேஸ்ஜயசிங்க, நீர் நிலைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாக டி.ஏ.ஜே. ரண்வல ஆகியோர் ஆராய்ந்தனர்.

ஆனால் முறையான தகவல்களை வழங்கவில்லை எனும் குற்றச்சாட்டும் உண்டு. இதில் தாம் இரவு வேளைகளில் புலம்பெயர் பறவைகள் தொடர்பில் ஆராயவில்லை என்கிறார் கலாநிதி தேவக்க வீரக்கோன்.

பறவைகள் காற்றாலையில் மோதுவதை முழுமையாக தடுக்க முடியாது, குறைக்கவே முடியும் எனவும் கூறுகிறார்.

காற்றாலை அமைக்கும் பகுதியில் வீதிகள் அமைப்பதால் இயற்கை நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு மன்னார் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்கிறார் சுற்றாடல் நீதிக்கான நிலையத்தின் மூத்த ஆலோசகர் ஹெமந்த விதானகே.

கடந்த வருடங்களில் பேசாலை பகுதி நீரில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

ஆகவே காற்றாலை அமைப்பதற்கு எதிரான மன்னாரில் உள்ள பொது அமைப்புகளின் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதி உட்பட பல அதிகாரிகளுக்கு முறையீடுகள் செய்யப்பட்டன.

இது தொடர்பில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பல கூட்டங்களில் முழுமையான எதிர்ப்புகளை காட்டப்பட்டன.

இருந்த போதும் இவை அனைத்தையும் அரசு கண்டு கொள்ளவில்லை. தன் திட்டத்தைச் செயல்படுத்தவ. அது முனைப்பு காட்டி வருகிறது.

உலகின் புவி வெப்பமயமாதல் காரணத்தால் இயற்கையின் மாறுபாடு உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், அவற்றை தடுப்பதற்குரிய வழிகள் இல்லாமல் உலகம் தடுமாறுகின்ற நிலையில், மன்னார் தீவுப் பகுதி அதனை தாக்குப்பிடிக்க கூடிய வலிமை எதுவும் இல்லை என்பதே சமூகவியலாளர்களின் எதிர்ப்புகளுக்கு காரணம் ஆகும்.

உலகளாவிய ரீதியில் பல ஆய்வாளர்களும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி உள்ளனர். ஆனாலும் அரசாங்கம் செவி சாய்ப்பதாக இல்லை.

பொருளாதார ரீதியாக இந்திய நலன்களை அதிகம் பெற்றுக் கொண்டதாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய அதிகார வர்க்கத்துக்கும் அதிக நல்லுறவு இன்மையாலும், ரணில் ஜனாதிபதியாகத் தொடர்வதை அவர்கள் ரசிக்கவில்லை எனும் விமர்சனமும் உண்டு.

இந்தப் பின்னணியில், இலங்கையில் தேர்தலை எதிர்கொள்ள உள்ள சூழ்நிலையில், ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் முரண்பட விரும்பமாட்டார் என்றே தோன்றுகிறது.

இக்காற்றாலை விவகாரம் சம்பந்தமாக ஜனாதிபதி எவருடனும் உரையாடுவதற்குக் கூட தயாராக இருக்கிறார் எனத் தெரியவில்லை.

ஏனெனில் இந்தியாவுடன் முரண்பட வேண்டிய நிலை ஏற்பட்டு, அவ்விதமாக முரண்பட்டால் தன்னை வேறு விதமாக அதிகாரத்தில் இருந்து அகற்றி விடுவார்கள் என அரசியல் கணக்கு அவர் போடலாம். எல்லாமே பதவி நலன் சார்ந்த செயற்பாடுகளும் தீர்மானங்களுமே.

இதில் ஏலவே அமைக்கப்பட்ட காற்றாலைத் திட்டத்திற்கு இல்லாத எதிர்ப்பு அதானி திட்டத்திற்கு ஏன் எழுகிறது என இந்தியத் தரப்பு ஆராய்கிறது.

இங்கு கத்தோலிக்கர்கள் செறிந்து வாழ்வதால், வருவத்ய் இந்திய நிறுவனம் என்பதால் குடியேற்றம் ஏதாவது வந்தால் அது இந்துத்துவ கோட்பாட்டை மேலோங்க செய்துவிடும் என மன்னாரில் உள்ள கத்தோலிக்கர்கள் அஞ்சுகிறார்கள் என இந்தியத் தரப்பில் கூறப்படுகிறது. இதில் பெரிய உண்மை இருப்பதாக தெரியவில்லை.

ஆனாலும் இவ்விடயத்தை ஒட்டி பல ஏக்கர் காணிகள் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பின்னணியில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன எனவும், சில இடங்களை அடாத்தாக அபகரித்துள்ளனர் எனவும் உள்ளூர் வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மன்னாருக்கு வெளியே காற்றாலை அமைக்க வேண்டும் என்பதே பொது அமைப்புகளின் கோரிக்கையாகும். அவர்கள் காற்றாலை திட்டத்தை எதிர்க்கவில்ல. மாறாக மன்னாரத் தீவுப் பகுதியில் அமைப்பதையே எதிர்க்கின்றனர். ம

இதேபோல்தான் கனிம மண் அகழ்வும். கடந்த 2018 டிசம்பர் முதல் ஓரியன் மினரல்ஸ் ஹில் சித்த இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் அதன் நிதி பங்குதாரர் ஆன டைட்டானியம் சாண்ட்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் – இந்த நிறுவனங்களும் அதானியுடையவையே என கூறப்படுகிறது.

500 ஹெக்டேயர் நிலப்பகுதியில் சுமார் நாலயிரத்திற்கு மேற்பட்ட துளையிட்டு மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். இதில் டைட்டானியம் உட்பட பல கனிம தாதுக்கள் உள்ளன எனக் கூறப்படுகிறது.

ஆழமான துளையிடுவதன் மூலம் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் நிலக்கிழ் தட்டுக்களும் அதிர்வடையலாம். அதனால் இயற்கை அனர்த்தங்கள் இயல்பாக நிகழலாம்.

வறட்சி அதிகரிக்கலாம். விவசாயம் முழுமையாக பாதிக்கப்படலாம். இவை எவையும் கருத்தில் கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை.

இதை அனுமதிக்கும் புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் இலங்கையில் உள்ள ஊழல் நிறுவனங்களில் உச்சம் தொட்டது ஆகும். அதன் வழிகாட்டுதல் நம்பகத்தன்மையை இழக்க வைக்கும் செயற்பாடு ஆகும்.

இதில் அரசியல் நலன் மற்றும் இலஞ்சமே முதன்மை பெறுகின்றன. இதிலும் கனிம மண் உள்ள பகுதியில் பல இடங்களில் அரசியல்வாதிகளின் பினாமிகள் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை போலி உறுதிகள் மூலம் அபகரித்துள்ளனர்.

இதனால் மன்னார் தீவுக்கு பேராபத்து ஏற்படலாம். அதனை தடுப்பதற்குரிய போராட்டத்தின் பயன் என்பது பெரும் சவாலாகவே உள்ளது.

காற்றாலை, கனிம அகழ்வுத் திட்டம் போன்ற விடயங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் மௌனம் காக்கின்றனர்.

அவர்களின் எஜமானர்கள் கோபித்து விடுவார்கள் என்பதால், அந்த மக்களின் வாக்கு பெற்று நாடாளுமன்றம் போனவர்கள் பானிப் பூரிக்காரர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த இரண்டு திட்டங்களையும் சிங்களப் புத்தி ஜீவிகள் எதிர்க்கிறார்கள். தமிழ்ஒ புத்திஜீவிகள் என சொல்லப்படுபவர்கள் அரசின் ஏக விசுவாசிகளாக மௌனம் காக்கிறார்கள்.

ஆனாலும் அந்த மக்களோ, போராட்ட அமைப்புகளோ இத்திட்டத்தை செயல்படுத்த இலகுவாக அனுமதிக்க மாட்டார்கள் என்றே தோன்றுகின்றது.

இயற்கையை சுரண்டுவதிலும் இயல்பை கெடுப்பதிலும் ஆதிக்க வர்க்கம் அதிதீவிர முனைப்பு காட்டுகிறது. பாதிக்கப்பட போவது சாமானிய மக்களே. இவர்களை காப்பது யார்?

Recommended For You

About the Author: admin