சினிமா உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இந்நிலையில் இவர் இசையமைத்த 4500 பாடல்களை எக்கோ, அகி ஆகிய இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் பயன்படுத்தி வருவதாக, இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பாளர்களின் உரிமையைப் பெற்று இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு தடை உத்தரவு விதித்தது.
எக்கோ நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இசை நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “திரைப்படத்துக்காக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெறும் இசையமைப்பாளர் உரிமம் தவிர ஏனைய உரிமங்களை இழந்து விடுகிறார். இந்த விடயத்தில் இளையராஜாவுக்கு உரிமம் இருக்கிறதா? இல்லையா? என்பது விசாரணையில்தான் தெரிய வரும். இளையராஜா தான் அனைத்துக்கும் மேலானவர் என நினைக்கிறார்” என்றும் தெரிவித்தார்.
இதில் குறுக்கிட்ட இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “ஆம். இளையராஜா அனைத்துக்கும் மேலானவர் தான்” எனக் கூறியுள்ளார்.
அதற்கு நீதிபதி, “இசை மூர்த்திகளான முத்துஸ்வாமி தீக்சிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகளை அனைவருக்கும் மேலானவர் எனக் கூறலாம். ஆனால் இதனை ஏற்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
மேலும் இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “எல்லோருக்கும் மேலானவர் எனக் கூறியது. பாடல்கள் மீதான காப்புரிமை விடயத்தில் மட்டுமே. மற்றபடி இளையராஜா தன்னை அப்படிக் கூறிக்கொண்டதில்லை என்பது உங்களுக்கே தெரியும்” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை 24ஆம் திகதி ஒத்திவைக்க உத்தரவிட்டது.