ஈரானின் பல பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலால் உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளன.
ஒரே நாளில் ஆசிய சந்தையில் ஒரு பீப்பாய் எரிபொருள் மூன்று வீதம் உயர்ந்துள்ளது. BRENT, MURBAN, WTI வகையான கச்சா எண்ணெய்கள் 88 டொலர்கள் வரை உயர்ந்துள்ளன. தங்கத்தின் விலை 2400 டொலராக அதிகரித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட உலகின் பல முக்கிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொருட்கள், சேவைகளின் விலைகளில் அதிகரிப்பு
இஸ்ரேல், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் சடுதியாக அதிகரித்து வருகின்றன.
இந்த திடீர் விலை அதிகரிப்பானது உலகப் பொருளாதாரத்தில் எதிர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2022ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த இலங்கைத் தீவானது, சர்வதேச கடன் வழங்குநர்களுடன் ஏற்படுத்திவரும் சில இணக்கப்பாடுகள் காரணமாக கடன் மறுசீரமைப்பு பணிகளை முன்னெடு வருகிறது.
சர்வதேச நாணய நிதியமும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பணிகளுக்கு உதவிகளை வழங்கி வருவதுடன், இரண்டு கட்ட கடன் தவணைகளையும் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்த வருவதால் இலங்கையிலும் எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள் பாரிய அளவில் உயர்வடையும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இலங்கைத் தேயிலையை ஏற்றுமதி செய்வதில் சிக்கல்
இலங்கையில் இன்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 1,94,000 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கத்தின் விலை 1,71,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வாரத்துடன், ஒப்பிடுகையில் 15ஆயிரம் ரூபா வரை தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
போர் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தால் தங்கத்தின் விலை இரண்டு இலட்சத்தை கடக்கும் என கொழும்பு செட்டியார் தெரு நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கடந்த சில மாதங்களாக வலுவடைந்துவந்த ரூபாவின் பெறுமதி தற்போது வலுவிழந்து வருகிறது. கடந்த வாரம் 300 ரூபாவிற்கு கீழ் சென்ற டொலரின் பெறுமதி தற்போது 300 ரூபாவை தாண்டி அதிகரித்து வருகிறது.
மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் இலங்கையில் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் மெல்ல மெல்ல உருவாகி வருகிறது. அதன் முதல் கட்டம்தான் இலங்கைத் தேயிலையை ஏற்றுமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமை.