மத்திய கிழக்கில் பதற்றம் – மூன்றாம் உலகப் போர் மூழும் அபாயம்

ஈரான் மீது இஸ்ரேல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஞாயிறு காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசி பாரிய தாக்குதலொன்றை நடத்தியிருந்தது.

சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளில் 99 வீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் அழித்துவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது

என்றாலும், சில மத்திய கிழக்கு ஊடகங்கள் இஸ்ரேலின் மாய விம்பம் ஈரானால் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலில் இஸ்ரேலுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தன.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த முதலாம் திகதி நடத்திய தாக்குதலில் முக்கிய இராணுவத் தலைவர் உட்பட 7 ஈரானியர்கள் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாகவே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது. ஈரான் விடயத்தில் மௌனம் காக்குமாறு இஸ்ரேலில் நட்பு நாடுகளாக கருதப்படும் அமெரிக்காவும் மேற்கத்தேய நாடுகளும் வலியுறுத்தி வந்தன.

என்றாலும், அமெரிக்கா உட்பட தமது நட்பு நாடுகளின் கருத்துகளுக்கு செவிகொடுக்காத இஸ்ரேல் இன்று மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்

சிரியாவை மையமாக கொண்டு ஹிஸ்புல்லா அமைப்பு இயங்கிவருகிறது. இவர்கள் ஈரான் ஆதரவு போராளிகள். இவர்கள்தான் பலஸ்தீனத்தில் ஹமாஸ் படைக்கு உதவி செய்து வருகின்றனர். இவர்களின் ஆதரவின் பெயரிலேயே ஹமாஸ் படைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல் 3ஆம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

”மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது என ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ்” இந்தத் தாக்குதலை தொடர்ந்து தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அத்துடன், வெடிகுண்டுகள் தாங்கிய விமானங்கள் மற்றும் போர் வாகனங்கள் தயாராக இருப்பதாக ஈரான் இராணுவத் தளபதி நேற்று வியாழக்கிழமை எச்சரித்திருந்த பின்புலத்திலேயே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து உலக சந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகின்றன. இது உலக பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: admin