இலங்கைத்தீவின் தலையெழுத்தை மாற்றும் வகையில் எதிர்வரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் அமையவுள்ளது.
சிறந்த ஒரு ஆட்சியாளரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாட்டு மக்கள் உள்ளனர். ஆனாலும், ஆட்சியாளர்களின் அரசியல் சித்து விளையாட்டுக்களுக்கு மாத்திரம் குறைவொன்றும் இல்லை.
கட்சிகளுக்குள் பிளவு, புதிய கட்சிகள் புதிய தலைவர்கள் என எதிர்ப்பார்க்க முடியாத பல திருப்பங்கள் இலங்கை அரசியலில் இடம்பெற்று வருகின்றன.
கொழும்மை மையமாகக் கொண்ட தேசிய அரசியலில் பல உத்திகளும் மாற்றும் திட்டங்களும் காய்நகர்த்தப்பட்டு வருகின்றன.
ரணிலின் நோக்கம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக்க வேண்டுமென்பதே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா காரசாரமாக விமர்சித்துள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாவதன் மூலம் இலங்கைத்தீவு மீண்டும் வங்குரோத்து அடையும் என்பதை நன்கு அறிந்த ரணில், அதன்பின்னர் கோட்டாபயவை மக்கள் போராட்டத்தின் மூலம் ஜனாதிபதி பதவியிலிருந்து விலக்கியதைப் போல வேறு திட்டமொன்றின் மூலம் அனுரவை பதவி விலக்க தயாராகி வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், சஜித் ஜனாதிபதியாக பதவியேற்றால் இதனை செய்ய முடியாது என்பதையும் ரணில் நன்கு அறிவார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, புத்தாண்டு விடுமுறைக்காக நுவரெலியாவுக்குச் சென்ற ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான திட்டத்தை தீட்டி முடித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.
ஆளுநர்கள் இடமாற்றம்
அதன்படி, இம்மாத இறுதியில் ஆளுநர்கள் சிலரை மாற்றம் செய்வது தொடர்பில் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமேற்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் லக்ஷமன் யாபா அபேவர்தனவை தென் மாகாண ஆளுநராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் மாகாண ஆளுநராக லக்ஷமன் யாபா அபேவர்தனவை நியமித்ததன் பின் வெற்றிடமாகும் வடமேற்கு மாகாண புதிய ஆளுநர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டை தெரிவு செய்யவுள்ளதாவும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.
எவ்வாறாயினும், இந்த கதைகளின் உண்மைத்தன்மை எதுவாக இருப்பினும் தற்போது தென் மாகாண ஆளுநராக இருக்கும் விலீ கமகேவை இம்மாத இறுதியில் ஓய்வூதியம் வழங்கி அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் பசில் ராஜபக்சவும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பசில் கோரிக்கை
மொட்டுக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளாராக கடமை புரியுமாறு பசிலிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலேயே விலீ கமகே ஆளுநர் பதவியிலிருந்து விலக இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஜனாதிபதி செயலகத்தையும் முழுமையாக புனரமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி செயலக ஊடகப் பேச்சாளர் ஒருவரையும் நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த தீர்மானங்களை மேற்கொள்ளும் நோக்கில் விடுமுறைகளை நிறைவு செய்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் நாளை (20) ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.