இலங்கைத் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (National Medicines Regulatory Authority – NMRA) சட்ட அமுலாக்க அமைப்பில் இந்த வாரம் ஒரு அதிகாரி மாத்திரமே கடமையாற்றவுள்ளார்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் மனித ஹீமோகுளோபின் போன்ற தரமற்ற மருந்துகள் சந்தைக்கு வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.
NMRA சட்ட அமுலாக்கப் பிரிவு தலைமைக் காரியாலயத்தில் குறைந்தது 20 உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் இயங்க வேண்டும். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக அனுபவமிக்க இரண்டு அதிகாரிகளுடன் மட்டுமே இந்த தலைமைக் காரியாலயம் இயங்கி வருகிறது.
இவ்வாறிருக்க NMRA சட்ட அமுலாக்கப் பிரிவின் தலைமைக் காரியத்தில் இருந்த இரண்டு அதிகாரிகளில் ஒருவர் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், கடந்த திங்கட்கிழமையிலிருந்து ஒரு அதிகாரி மாத்திரமே செயல்பட்டு வருகிறார்.
இந்த NMRA சபையானது, 2015ஆம் ஆண்டில் சட்டம் எண்.5ஆல், மருத்துவப் பொருட்களின் பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் தர நிலைகளை உறுதி செய்தல், சுகாதாரத்தை மேம்படுத்தல் பாதுகாத்தல், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், தயாரிப்புகளின் எல்லைக்கோடுகள், மருத்துவ பரிசோதனைகள், அழகுசாதனப் பொருட்களின் தரம் போன்றவற்றை பரிசோதிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த சபையில் பணியாற்றும் ஒரு அதிகாரியும் வருகின்ற ஜூன் மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய உணவு மற்றும் மருந்து ஆய்வாளர்களை நியமிக்கவோ அல்லது மீதமுள்ள தொழில் வெற்றிடங்களை நிரப்பவோ அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் இந்தப் பிரிவு நெருக்கடியை சந்தித்து வருகிறது.
மாவட்ட அளவில் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும் மருந்துச் சோதனைகளின் முக்கிய ஒழுங்குமுறை மற்றும் ஒருங்கிணைப்பு, தவறான மருந்து உற்பத்தியாளர்கள் குறித்த ஆய்வுகள் மேற்கூறப்பட்ட இரண்டு அதிகாரிகளின் தலைமையில் இடம்பெற்றது.
NMRA ஆனது வைத்தியர். ஆனந்த விஜேவிக்ரம தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இதுகுறித்த கருத்துக்களை வினவுவதற்கு குறித்த திணைக்களத் தலைவரை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
நாட்டையே உலுக்கிய மனித ஈமோகுளோபின் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வவது NMRA சட்ட அமுலாக்கப் பிரிவின் முக்கிய பொறுப்பாகும்.
இந்த விவகாரம் தொடர்பாகவே முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட பல மூத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் சிறைக்கு சென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.