விமானத் தாக்குதல்: ரஷ்ய கூலிப்படையாக செயற்பட்ட இரு இலங்கையர்கள் பலி

உக்ரைன் இராணுவத்தினரால் நேற்று (10) நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக செயற்படும் இலங்கையர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற இரண்டு இராணுவ வீரர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டிலிருந்து கிடைத்த தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனின் ஆக்கிரமிப்பு பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடவிருந்த ரஷ்யப் படைகளை இலக்கு வைத்து உக்ரைன் இராணுவம் நடத்திய தாக்குதலில் இந்த இரண்டு இலங்கையர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாக அந்நாட்டிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், உயிரிழந்த இலங்கையர்கள் இருவரும் சுற்றுலா விசாவில் ரஷ்யா சென்று அந்நாட்டு இராணுவத்தில் இணைந்துகொண்ட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் என கூறப்படுகிறது.

ரஷ்ய இராணுவத்தில் துணை சேவை வேலைகள் என்று கூறி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்று பணியில் அமர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மனித கடத்தல் குழுவொன்றினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. கடந்த காலங்களிலும், கூலிப் படையாக செயற்பட்ட பலர் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin