செலுத்தப்படாத 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உலகளாவிய பத்திரங்களை மறுசீரமைக்கும் நோக்கில் உலக முதலீட்டாளர்களும் இலங்கை அதிகாரிகளும் இரண்டாவது சுற்று கலந்துரையாடலில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
மார்ச் மாத இறுதியில் இடம்பெற்ற முதல் சுற்று கலந்துரையாடலின் போது வழிகாட்டுதல் குழு எனப்படும் பத்திரதாரர்களின் குழு மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் ஒப்பந்தம் எதுவுமின்றி பேச்சுகளை நிறைவு செய்திருந்தனர்.
இந்நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி வாஷிங்டன் டிசியில் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்த காலக் கூட்டத் தொடரில் இரண்டாவது சுற்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதுதொடர்பான முன்மொழிகள் தொடர்பில் எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.
பத்திரங்கள் மற்றும் கடன்கள் உட்பட 27 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் இலங்கையின் திட்டத்தில் தனியார் முதலீட்டாளர்களுடனான ஒப்பந்தமும் ஒன்றாகும்.
சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பிலிருந்து நிதியுதவி தொடர்ச்சியாக கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு மறுசீரமைப்பு அவசியமானது.
அரசாங்கம் சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உட்பட உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனும் அதன் உள்ளூர் கடனாளர்களுடனும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
ப்ளூம்பெர்க் தொகுத்துள்ள குறியீட்டு விலையின்படி, 2030 ஆம் ஆண்டில் இல் செலுத்த வேண்டிய டொலர் பத்திரங்கள், மிதக்கும் நிலையில் காணப்படுவதுடன் இந்த வருடம் சுமார் 9 சென்ட்கள் அதிகரித்து டொலரில் 59 சென்ட்கள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன.
மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மேக்ரோ-இணைக்கப்பட்ட பத்திரங்களை வெளியிடுவது தொடர்பில் அரச அதிகாரிகள் மற்றும் உலகளாவிய பத்திரதாரர்கள் ஆலோசித்துள்ளனர்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் செயல்திறனுடன் பிணைப்பத்திரக் கொடுப்பனவுகளை இணைக்கும் அந்தப் பத்திரங்கள், முதல் சுற்றுப் பேச்சுக்களின் போது விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.