2019ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானம் காரணமாக நியூசிலாந்து அணி உலகக் கிண்ணத்தை இழந்தது என போட்டியின் நடுவராக இருந்து ஓய்வு பெற்ற தென்னாப்பிரிக்காவின் முர்ரே எராஸ்மஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் இடம்பெற்று 5 ஆண்டுகளுக்கு பின்னரே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் காணப்படும் தி டெலிகிராப் (the telegraph) நாளிதழுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த போட்டியின் கடைசி ஓவரின் நான்காவது பந்தில், பந்து மீள விக்கெட் காப்பாளருக்கு வீசப்பட்ட போது பென் ஸ்டோக்ஸின் மட்டையில் பட்டு பந்து எல்லைக்கு சென்றது.
அதன்போது கள நடுவர்களாக செயல்பட்ட குமார் தர்மசேன மற்றும் முர்ரே எராஸ்மஸ் ஆகியோர் 6 ஓட்டங்களை வழங்கினர்.
இதன்போது களத்தில் இருந்த இருவரும் இரண்டாவது ஓட்டத்துக்குள் நிலை மாறவில்லை என்பது உறுதியான நிலையில் ஐசிசி கிரிக்கெட் விதிகளின்படி, இங்கிலாந்து அணி 6 ஓட்டங்களுக்கு பதிலாக 5 ஓட்டங்களையே வழங்கியிருக்க வேண்டும்.
அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் சூப்பர் ஓவர் வரை போட்டி சென்றிருக்காது. புள்ளிகள் சமமாகாமல் போட்டியின் முடிவு சமநிலை அடையாமல், நியூசிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வென்றிருக்கும்.
இந்நிலையில், போட்டி நிறைவடைந்து மறுநாள் காலை நான் உணவு உண்ண சென்ற போது , எனது ஹோட்டல் அறையின் கதவை திறந்ததும், அதேநேரம் போட்டியில் மற்றுமொரு நடுவராக செயல்பட்ட குமார் தர்மசேனவும் அவரது அறையின் கதவைத் திறந்தார்.
அப்போது, ”உலகக் கிண்ண போட்டிகளின் ஏழு வாரங்களில் நான் செய்த ஒரே தவறு இது தான். இதை நான் குற்ற உணர்ச்சியாக எண்ணுகிறேன்.” என குமார தர்மசேன தன்னிடம் கூறியதாக தி டெலிகிராப் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முர்ரே எராஸ்மஸ் கூறியுள்ளார்.