மத்திய அரசின் சிறப்பு திட்டங்களை மக்களிடம் சேரவிடாமல் திமுக அரசு தடுத்து நிறுத்துவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர்களுடன் நமோ செயலி வாயிலாக ‘எனது பூத், வலிமையான பூத்’ எனும் தலைப்பில் பிரதமர் மோடி நேற்று மாலை கலந்துரையாடினார்.
இதன்போது பாஜகவின் வெற்றிக்கு நிர்வாகிகளின் பணிகள் தொடர்பில் பிரதமர் கேட்டறிந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் திட்டங்களில் பயனடைந்தோரின் எண்ணிக்கை, விபரங்கள், தமிழகத்தில் குடும்ப ஆட்சி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பவை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தேர்தல் செயற்பாட்டில் ஈடுபடும் போது கூட்டணி கட்சியினரையும் ஒருங்கிணைத்து செய்ய வேண்டும் எனவும் வெற்றிக்கான ரகசியம் வாக்குச்சாவடியில் உள்ளதெனவும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் மூத்த மொழியாக கருதப்படும் தமிழ் மொழி உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளும் அறிந்திருப்பதற்கு பாஜக அரசு பாடுபடும் எனவும் உறுதியளித்துள்ளார்.
தமக்கு ”தமிழ் தாய் மொழியாக கிடைக்கவில்லை” என்பது மிகவும் கவலையளிக்கிறது என கூறி தமிழ் மக்களை பிரதமர் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
இதேவேளை “தமிழ்நாட்டுக்கான சிறப்புத்திட்டங்களை வழங்காத மோடிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” என தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது பிரதமர் மோடியின் சிறப்பு திட்டங்கள் தொடர்பில் வெளிகொணர்வுக்கான நடவடிக்கையை அவதானிக்க முடிகின்றது.