எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.
மட்டக்களப்பு கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில், முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இதனை அறிவித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியை விமர்ச்சித்த அவர் குறித்த காலகட்டத்தில் நாடு பாதாளத்தில் தள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டை கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கு அளப்பரியது எனவும், ஜனாதிபதி தலைமையிலே நாடு முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, போராளிகளின் நலன் கருதி ‘அம்மான் படை’ எனும் புதிய அமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டு வடமாகாணத்தில் இயங்கிவரும் நிலையில், குறித்த அமைப்பு விரைவில் கிழக்கு மாகாணத்திற்கு விஸ்தரிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி பல்வேறு தேர்தல்களை சந்திக்கவுள்ள நிலையில், கூட்டணி அமைப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து இறுதி கட்டத்தில் அறிவிப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.