இராணுவத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை?

முல்லைத்தீவு மாவட்டம், யுத்த மோதல்களினால் பாரிய அழிவை சந்தித்த பூமி.

இங்குள்ள வளங்கள் பல அழிக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டது. இருந்த போதிலும் தமிழ் மக்கள் உழைப்பையும் நம்பிக்கையையும் கைவிடவில்லை.

1983ஆம் ஆண்டு தொடக்கம் மூடப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓடு,செங்கல் தயாரிக்கும் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள ஓட்டுத்தொழிற்சாலை போரிற்கு பின்னர் இயங்காத நிலையில் நீண்டகாலமாகக் காணப்படுகின்றது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள ஓட்டுத்தொழிற்சாலை போரிற்கு பின்னர் இயங்காத நிலையில் தற்போது இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையில் இராணுவத்தினரால் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இது தொடர்பில் தமிழ் மக்கள் விமர்சனத்தை வெளியிட்டு வருகின்றனர்.

இராணுவத்தின் கீழ் கொண்டு வந்து அங்கு மேற்கொள்ளப்படும் உற்பத்திகள் , வேலை வாய்ப்புகள் என்பவை சிங்கள மக்களுக்கு வழங்கப்படும் என்ற அச்சம் தமிழ் மக்களிடையே நிலவி வருகிறது .

குறித்த தொழிற்சாலை எந்த நடவடிக்கையும் அற்ற நிலையில் மாறிமாறி அரசியலுக்காக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கிய போதும், எதுவும் செய்யப்படவில்லை.

அங்குள்ள இயந்திரங்கள் எவையும் செயற்படுத்த முடியாத நிலையில் கைவிடப்பட்டிருந்த தொழிற்சாலையை சிலோன் செராமிக்ஸ் கூட்டுத்தாபனம் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கைக்கு இணங்க இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி புனரமைப்புத் திட்டத்தை இராணுவம் ஆரம்பித்துள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அப்பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்பட்டுகின்றது.

Recommended For You

About the Author: admin