2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(01-01-2026) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது புதிய ஆண்டினை வரவேற்று தமது கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக காலை 9.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காகவும் பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தனது கருத்துரையில் அரசாங்கத்தின் புதிய எண்ணக்கருக்களான வறுமையை ஒழித்தல், டிஜிற்றல் மயமாக்கல், க்ளீன் ஸ்ரீலங்கா ஆகிய எண்ணக் கருத்துக்களை உள்ளடக்கியதாக சிறப்புரை ஆற்றியிருந்ததுடன் அண்மையில் நடைபெற்ற வெள்ள அனர்த்தத்தின் பாதிப்புக்கள் அவற்றில் இருந்து மீள் எழும் திட்டங்கள் தொடர்பிலும் கருத்துரைத்த அதேவேளை இந்த வருடம் அனைவரது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவரவேண்டுமென புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ச.மஞ்சுளாதேவி(நிர்வாகம்), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.ஜெயக்காந்(காணி), பிரதம உள்ளகக் கணக்காய்வாளர்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து கொண்டிருந்தனர்.


