முகமது யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
இந்த அமைப்பு கடந்த 2019ம் ஆண்டு தடை செய்யப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
“ தடை செய்யப்பட்ட ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி’ அமைப்பு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.
மேலும் ”பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் தரப்பினரையும், அமைப்புகளையும் மோடி அரசு காப்பாற்றாது. தேசத்தின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு சவால்விடும் எவரும் சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் 4 அமைப்பகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவை என அறிவிக்கப்பட்டு புதிதாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெியிட்டுள்ளன.
சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜமாத்இஸ்லாமி அமைப்பு தடை செய்யப்பட்ட சில நாட்களில் இந்த தடை உத்தரவு வெளியாகியுள்ளது.
எந்த ஒரு அமைப்பையும் சட்டவிரோத அமைப்பாக அரசிதழில் அறிவிக்கும் அதிகாரத்தை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (Unlawful Activities (Prevention) Act, 1967) வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.