தனிச் சிங்கள வாக்கே கோட்டாவிற்கு ஆப்பு

தென்னிலங்கை ஆட்சியாளர்களின் ஆழ்மனத்தில் எப்போதும் பதிந்த விடயம் சிங்கள பௌத்தவாதம்.அதனை வைத்தே தமது அதிகாரத்தைப் பெற்றுவிடலாம் என்பதே.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தென்னிலங்கையில் மிகவும் தீவிரமாக வளர்ந்துள்ள கொள்கை.பௌத்த மத முன்னுரிமை, சிங்கள மொழி பாவனை என தென்னிலங்கை ஆட்சியாளர்கள் சிங்கள மக்களை கவர்வதற்கு கையில் எடுக்கும் ஆயுதம் அவை.யுத்தம் நிலவிய காலம் வரை புலிகளை காரணம் காட்டி நாட்டை பிரிப்பதற்கு தமிழ் சமூகம் முற்படுவதாகவும் அதற்கு எதிராக செயற்பட வேண்டும் என இனவாத கருத்துக்களை தூண்டி வாக்கு அறுவடை செய்திருந்தார்கள்.

2009 இற்கு பின்னர்

தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தை ராஜபக்சர்கள் கையில் எடுத்திருந்தனர்.

நாட்டு மக்களை ஒன்றிணைப்பதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் பதிலாக மக்களை கூறுபோட்டு,பொருளாதாரத்தை சிதைத்து தமது அதிகாரத்தை தக்கவைக்கவும் கைப்பற்றவும் முற்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

இதன் விளைவினை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் குண்டு வெடிப்பிற்கு பின்னரான இலங்கையின் ஆட்சி மற்றும் பொருளாதார சிக்கல்களை பார்த்திருக்கிறோம். யுத்தம் நிலவிய காலத்தில் கூட இத்தகைய துயரத்தை மக்கள் அனுபவித்திருக்கமாட்டார்கள்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிக்கு அமைய ராஜபக்சர்கள் விதைத்த அறுவடை செய்திருந்தார்கள்.

உண்மையில் சிங்கள மக்களை ஏமாற்றி அவர்கள் மத்தியில் அரசியல் தொடர்பில் இனவாத விம்பத்தை ஏற்படுத்தி மேற்கொண்ட அரசியல் தந்திரம் தற்போது மலை ஏறிவிட்டது.

2022 ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியாளர்களான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிராக தென்னிலங்கை மக்கள் கிளர்ந்தெழுந்திருந்தனர்.

பொருளாதார நெருக்கடியினை தோற்றுவித்தவர்களை மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வீட்டுக்கு அனுப்பியிருந்தனர்.

மீண்டும் அரசியல் குத்துக்கரணம் போடும் ராஜபக்சாக்கள்

சிங்கள மக்களை மீண்டும் ஏமாற்றி அவர்களின் வாக்குகளில் அரசியல் சவாரி செய்வதற்கு ராஜபக்சர்கள் தற்போது அரசியல் சதி என்ற ஒன்றை கையில் எடுத்துள்ளார்கள்.

கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்திலிருந்து இறக்குவதற்கு பிராந்திய, சர்வதேச சதி காணப்பட்டதாக அவர் எழுதியுள்ள புத்தகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இலங்கையின் இறைமை மீது பிறசக்திகளின் அழுத்தம் இருப்பதாக காண்பித்து, அதிலிருந்து மக்களை காப்பாற்ற தமக்கு அதிகாரத்தை சிங்கள மக்கள் கொடுக்க வேண்டும் என்ற பிரசாரத்தை ஆரம்பிக்க ராஜபக்சர்கள் எத்தணித்துள்ளனர்.

இது எவ்வளவு தூரத்திற்கு சிங்கள மக்களுக்கு எடுபடும் என்பது சந்தேகமே. யுத்தம் இலங்கையில் நிறுத்தப்பட வேண்டும் என்றே சிங்கள மக்கள் விரும்பினார்களேயன்றி தமிழ் மக்களை அழிக்க வேண்டும் என்று அல்ல.

இதனை சிங்கள கடும்போக்குவாத ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அதனைவிடுத்து தொடர்ந்தும் இனவாத அரசியலை செய்ய முற்பட முடியாது. இளம் சமூதாயம் மாறிவிட்டது. சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.

பொருளாதார ஸ்திரத்தன்மை

2022 இல் இடம்பெற்ற அரசியல் புரட்சிக்குப் பின்னர் மக்களின் தேவை எல்லாமே பொருளாதார ஸ்திரத்தன்மை.வாழ்வாதார முன்னேற்றம். தனிநபர் வருமான அதிகரிப்பு. நிம்மதியான வாழ்க்கை.

இதனை யார் செய்ய முற்படுகின்றார்களோ அவர்கள் ஆட்சி கதிரையில் ஏறுவார்கள். மக்களும் ஆதரிப்பார்கள். அதற்கு தகுந்த பொருளாதார கொள்கை வகுப்பும் திட்டங்களும் அவசியம்.

மேற்கு நாடுகள் தேர்தல் பிரசாரங்களில் பொருளாதார நலத்திட்டங்களை முன்னிலைப்படுத்தியே ஆட்சிக்கு வருகின்றனர்.

அவ்வாறு கொண்டுவரப்படும் கொள்கைகள் தோல்வியடையும் போது ஆட்சியினை கைவிட்டு வேறு தரப்பினரிடம் ஒப்படைக்கும் அரசியல் நாகரீகம் காணப்படுகின்றது. இதுவே அவர்களின் பொருளாதார முன்னெற்றத்திற்கு அடிநாதம்.

அத்தகைய ஒரு அரசியல் கலாசாரத்தை இலங்கையில் ஏற்படுத்த வேண்டும் என்பது இன்றைய இளைய தலைமுறையினரின் தேவையாகும்.

Recommended For You

About the Author: admin