இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றோம்

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா செயல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மார்ச் 11 ஆம் திகதி அமலுக்கு வந்தது.

இதன்படி பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

ஆனால், சிஏஏ சட்டத்தில் ஏன் முஸ்லிம்களுக்கு இடமில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க வகுக்கப்பட்ட சிஏஏ சட்டத்தில் ஏன் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் இது குறித்து, “மார்ச் 11ஆம் திகதி குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் அறிவிப்பு குறித்த விவரங்களை இந்தியா வெளியிட்டது.

இது எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்துக்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவதுதான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடு” என்று தெரிவித்துள்ளார்.

சிஏஏ-வில் முஸ்லிம்களுக்கு ஏன் இடமில்லை?

இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க வகுக்கப்பட்ட சிஏஏ சட்டத்தில் ஏன் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் கூறியிருக்கின்றார்.

அதனடிப்படையில்,

மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட மக்களுக்கு நமது நீதி நெறி மற்றும் அரசியலமைப்பின்படி அடைக்கலம் கொடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், மியான்மர், பாகிஸ்தான், இலங்கை, திபெத் ஆகிய நாடுகளை இந்தியாவுடன் உள்ளடக்கிய ‘அகண்ட பாரதம்’ எனும் நமது சித்தாந்தத்தின் அங்கம் இது.

இந்தியா-பாகிஸ்தான்

பிரிவினையின்போது பாகிஸ்தானில் குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்ட இந்துக்கள் அந்நாட்டின் மக்கள் தொகையில் அன்று 23% பங்கு வகித்தனர். இன்று அந்த எண்ணிக்கை 3.7 சதவீதமாக சரிந்துள்ளது. அவர்களெல்லாம் எங்கே சென்றார்கள்? அந்த மக்கள் இங்கு வரவில்லை.

அப்படியானால் அவர்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். அவமானப்படுத்தப்பட்டு, இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள். அம்மக்கள் எங்கே போவார்கள்? நமது நாடாளுமன்றமும் அரசியல் கட்சிகளும் இது பற்றி ஒரு முடிவு எடுக்க வேண்டாமா?

மற்றபடி ஷியா, பலோச், அகமதியா முஸ்லிம்கள்கூட குடியுரிமைக்கு விண்ணப்பிக்க இந்திய அரசியலமைப்பில் அனுமதி உண்டு. தேசப் பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும்.” இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin