fast fashion ஆடைகளுக்கு அபராதம் பிரான்ஸ் நாடாளுமன்றம் அனுமதி

சீனாவின் செயின் (Shein) போன்ற நிறுவனங்களினால் விற்பனை செய்யப்படும் பாஸ்ட் பேஷன் (fast fashion) எனும் பொலிவான மலிவு ஆடை தயாரிப்புகளுக்கு அபராதம் விதிக்கும் சட்டமூலத்திற்கு பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவை அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ஆடைக்கு 10 யூரோக்கள் வரை அபராதம் படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தகைய தயாரிப்புகளுக்கான விளம்பரங்களை தடை செய்ய வேண்டுமெனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆடைக் கழிவுகளினால் ஏற்படும் சிக்கலை எதிர்கொள்ளும் முயற்சியின் ஒருபகுதியாக பயன்படுத்தப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கும் என பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்ததை தொடர்ந்து இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாக்களிப்பதற்கு தகுதியுடைய அனைத்து சட்டமியற்றுபவர்களும் ஏகமனதாக இந்த சட்டமூலத்திற்கு அனுமதி அளித்துள்ளனர்.

குறித்த சட்டமூலம் செனட் சபையில் முன்வைக்கப்பட்டு சட்டமாக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் நிலையில், வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் தாக்கத்தை அனுபவித்து வரும் சாதாரண மக்கள் மேலும் சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்படும் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

Recommended For You

About the Author: admin