தென்னிலங்கையில் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றுவருகின்றது. பாதாள உலக கும்பல்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் தரப்பினருக்கிடையே இத்தகைய துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸ் திணைக்களம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.
அந்த வகையில் நேற்று இரவு இருவேறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பங்கள் இடம்பெற்றன. சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அம்பலாங்கொடை மற்றும் பிடிகல பிரதேசங்களில் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
துப்பாக்கிச் கூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்களை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
அம்பலாங்கொட, கலகொட, வெல வீதியில் அமைந்துள்ள கடையொன்றுக்கு அருகில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் டி56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி, துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவ ஸ்தலத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்தநிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில், ஹலம்ப உதேஷ் மதுஷங்க மற்றும் தடல்லகே சித்தும் அங்ஜன என்ற இருவர் உயிரிழந்திருந்தனர்.
லொகு சத்துர, பத்தினி வசம் அகில மற்றும் சங்கமகே சம்பிக்க துஷார ஆகியோர் காயமடைந்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, பிடிகல, குருவல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் முன்பாக நேற்று இரவு இடம்பறெ்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சசித் மதுஷங்க என்ற 31 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 26 வயதான கவிஷ்க அஞ்சனவும் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
துப்பாக்கிச் சூட்டுக்கு 9 மில்லி மீற்றர் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
இந்த சம்பங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கைகள்
குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறான குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை 20 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், இது தொடர்பான சுமார் 10 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது