மலி ஐயாவை நினைவூட்டிய பந்து வீச்சு

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நுவான் துஷாராவின் டி20 ஹெட்ரிக் சாதனை தனக்கு லசித் மலிங்காவை நினைவுபடுத்தியதாக சக வீரர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா, சில்ஹெட்டில் அசத்தலான ஹெட்ரிக் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, சனிக்கிழமையன்று பங்களாதேஷுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை கைப்பற்ற உதவினார்.

29 வயதான துஷாரா, பங்களாதேஷின் துடுப்பாட்டத்தின் போது, அணித் தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, டவ்ஹித் ஹ்ரிடோய் மற்றும் மஹ்முதுல்லாவை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து ஹெட்ரிக் சாதனை புரிந்தார்.

மேலும், அவர் பவர்பிளேயின் இறுதி ஓவரில் சௌமியா சர்க்காரை ஆட்டமிழக்கச் செய்தார், பின்னர் மற்றொரு விக்கெட்டை கணக்கில் சேர்த்து மொத்தமாக ஐந்து விக்கெட்டுகளை அள்ளினார்.

ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் துஷார, ஹெட்ரிக் சாதனை புரிந்த 57 ஆவது வீரர் ஆவார் என்பதுடன் ஆறாவது இலங்கை வீரர் ஆவார்.

இலங்கையின் அந்த ஆறு ஹெட்ரிக் சாதனைகளில் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்க இரு முறை ஹெட்ரிக் எடுத்துள்ளார்.

மலி ஐயாவை நினைவூட்டிய பந்து வீச்சு

துஷாரவின் பந்து வீச்சு தொடர்பில் டி20 தொடரின் ஆட்டநாயகன் விருதினை வென்ற சக வீரரான குசல் மெண்டீஸ் மூன்றாவது டி20 ஆட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையில்,

துஷாரவின் பந்து வீச்சுப் பாணி மலிங்கவின் பந்து வீச்சு பாணியுடன் ஒத்ததாக அமைந்துள்ளது.

அவரது திறன் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

டி20 உலகக் கிண்ணம் நெருங்கி வரும் நிலையில், எங்கள் பந்துவீச்சாளர்கள் பலர் இதுபோன்ற ஃபார்மில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அவர் சில காலமாக ஃப்ரான்சைஸ் லீக்குகளில் விளையாடி வருகிறார். அவர் தென்னாப்பிரிக்க லீக்கிலும் நன்கா விளையாடினார் -அதனால் தான் அவரால் சிறப்பாக செயற்பட முடிந்தது என்று நினைக்கிறேன்.

அந்த மூன்று விக்கெட்டுகள் [ஹெட்ரிக்] போட்டியை எங்களுக்குச் சாதகமாக மாற்றியது. இது மலி ஐயா [லசித் மலிங்கா] எப்படி பந்துவீசினார் என்பதை எனக்கு நினைவூட்டியது – என்றார்.

ஒட்டுமொத்த போட்டியும் ஒரு ஓவரில் மாறியது

நுவான் துஷாரவின் பந்து வீச்சு குறித்து பதிலளித்த பங்களாதேஷ் அணித் தலைவர் ஹொசைன் சாண்டோ,

ஒட்டுமொத்த போட்டியும் அந்த ஒரு ஓவரில் மாற்றி அமைந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

அவர் (துஷார) ஒரு நல்ல ஓவரை வீசினார் – பந்து வீச்சாளரைப் பாராட்ட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அந்த ஓவரால் நாங்கள் பின்வாங்கப்பட்டோம். அந்த ஓவரைச் சிறப்பாகக் கையாண்டிருந்தால் போட்டியில் வித்தியாசமான முடிவு கிடைத்திருக்கும் – என்றார்.

அடுத்தடுத்த போட்டிகள்

பங்களாதேஷுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரினை 2:1 என்ற கணக்கில் நிறைவுக்கு கொண்டு வந்துள்ள இலங்கை தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக காத்துள்ளது.

மார்ச் 13 ஆம் திகதி முதல் ஒருநாள் போட்டி தொடங்கும்.

ஒருநாள் தொடரின் பின்னர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகும்.

Recommended For You

About the Author: admin