இலங்கை நாடாளுமன்றத்தில் சாந்தனுக்கு அஞ்சலி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

சாந்தனுக்காக இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அஞ்சலி செலுத்தி உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,

”சாந்தனுக்கு இந்த இடத்தில் அஞ்சலி செலுத்திக்கொள்கிறேன்.

வரலாறு பல மனிதர்களை படைக்கிறது. வரலாறு பல மனிதர்களுக்கு புதிய பாதைகளை திறந்து விடுகிறது. ஆனால், தன்னுடைய தாயையும், ஊரையும், உறவினரையும் பார்க்க முடியாது 20 வயதில் புறப்பட்ட ஒரு இளைஞன் 53 வயதை கடந்து சடலமாக வந்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நானும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.

அதேபோன்று தமிழகத்தில் உள்ள இந்தியாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரனையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.

ஆனால், இந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்ததால் சாந்தன் சடலமாக இலங்கைக்கு திரும்பியிருந்தார்.

இவ்வாறான இழப்புகள் இனியும் தொடரக் கூடாது. ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் குடும்பத்துடன் வாழ வழிவகைகளை செய்யப்பட வேண்டும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இலங்கையின் அதிகாரிகளிடம் நாம் இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம்.” என்றார்.

Recommended For You

About the Author: admin