மியான்மரில் தீவிரவாத கும்பலால் தடுத்துவைக்கப்பட்டுள்ள 56 மாணவர்களை மீட்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சும் அங்குள்ள இலங்கைத் தூதரகமும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
தீவிரவாத கும்பலிடமிருந்து மீட்கப்பட்டுள்ள 8 பேரை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உள்ளானது.
இராஜதந்திர உறவு எதற்கு?
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களான வசந்த யாப்பான பண்டார, ஹர்சடி சில்வா ஆகியோர் பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கேள்வியெழுப்பினர்.
”தீவிரவாத கும்பலிடம் சிக்கியுள்ள 56 இலங்கையர்களில் 8 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள் இன்னமும் மியாவாடி பொலிஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இராஜதந்திர உறவுகள் இருந்ததால் அவர்கள் ஏன் பொலிஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எவ்வளவு காலம் பொலிஸில் தடுத்துவைக்கப்படுவார்கள் என வசந்த யாப்பா பண்டார கேள்வியெழுப்பினார்.
இலங்கை தூதரகத்தின் ஊடாக மியாவடி பொலிஸுக்கு உணவுகள் கொண்டுசெல்லப்பட்டடால் எமக்கும் அவர்களுக்கும் உள்ள இராஜதந்திர உறவு என்ன? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
இருவரது கேள்விகளுக்கும் பதில் அளித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,
ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். மியான்மர் உள்விவகார அமைச்சும், பாதுகாப்பு தரப்பினரும் இணைந்துதான் இந்த மாணவர்களை மீட்டுள்ளனர்.
விரைவாக பொலிஸில் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என நேற்றைய தினம் நான் அவர்களுக்கு தொடர்பை ஏற்படுத்திய போது கூறினார்கள்.
இங்கு 56 நபர்கள்தான் உள்ளனர். இந்தியர்களும், பங்காளதேஷியர்களும், பாகிஸ்தானியர்களும், நேபாளத்தினரும் இந்த மனித கடத்தலில் அகப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் விழிப்புணர்வு வேண்டும்
மனித கடத்தல்கள் தொடர்பில் அச்சுறுத்தலான தகவல்கள் வெளியாகிவரும் பின்புலத்திலும் 3 இலங்கையர்கள் திறந்த விசாவில் டுபாய் ஊடாக தாய்லாந்து சென்று அங்கியிருந்து நடந்து மியான்மார் சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்றவர்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த தமிழ் பேசுபவர்களாகும். சிங்கள ஊடகங்களில் இந்த விடயம் தொடர்பில் விழிப்புணர்வுகள் இருப்பதால் எவரும் செல்வதில்லை.
ஆனால், வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து செல்கின்றனர். தமிழ் ஊடகங்களும் இந்த விடயம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என்றார்